நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மரக்கறிகள் (Vegetables) தான் அதிகம் பங்கு வகிக்கின்றன. ஏனென்றால், உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் அளிப்பதோடு நோய்களிலிருந்து நம்மை காப்பதாலும் ஆகும். ஒவ்வொரு மரக்கறியிற்கும், ஒவ்வொரு விசேட மருத்துவ தன்மை கொண்ட குணங்கள் உண்டு.
எனினும், தற்போதை காலகட்டத்தில் விளைச்சலை அதிகமாக பெற பல வகையான இரசாயண உரங்களையும் கிருமிநாசின்களையும் பயன்படுத்துகிறார்கள்.
இவற்றால் விளைச்சல் அதிகமாகுமே தவிர, உடலுக்கு நன்மை கிடைக்காது. முடிந்தவரை, நாம் சேதன மரக்கறிகளை (Organic Vegetables) உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
மரக்கறிகள் மருத்துவ குணத்தை கொண்டிருப்பது மட்டுமன்றி உடலை அழகாக வைத்திருப்பதற்கும் உதவி புரிகின்றன. இனி மரக்கறிகளிலுள்ள மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்ப்போம்.
பச்சை அவரை (Beans)
பச்சை அவரைகளில் அதிகளவு விட்டமின் A,C மற்றும் K என்பன அடங்கியுள்ளன. அத்துடன், போலிக் அமிலம் (Folic Acid) மற்றும் நார் சத்துகளும் நிறைந்துள்ளன.
இந்த மரக்கறியானது இருதய நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கின்றது. இவற்றில் இருக்கும் ஃப்ளாவொனொயிட்ஸ் (Flavonoids) எனப்படும், பாலிபினோலிக் ஆண்டி ஒக்சிடெண்ட்கள் (Polyphenolic Antioxidants) இருதய நோய்கள் வராமல் தடுக்கின்றன.
பச்சை அவரை உட்கொள்வதை அதிகரிப்பதால், சுரப்பி போன்ற புற்றுக்கட்டிகள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் என்பன ஏற்படுவது குறைக்கப்படுவதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இவை நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
கேரட் (Carrot)
பொதுவாக கேரட்டில் விட்டமின்கள், கனிமங்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவு இருக்கின்றன. இவை பல்வேறுபட்ட நோய்களுக்கு குணமளிக்கக்கூடிய சக்தியை வழங்குகின்றன.
குறிப்பாக, இவற்றில் இருக்கும் ஆண்டி ஒக்சிடெண்ட்கள் பலவகையான புற்றுநோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. ஆண்டி ஒக்சிடெண்ட்களுடன் இவற்றில் இருக்கும் பைதோகெமிக்கல்கள் (Phytochemicals) நீரிழிவு நோயின் அளவை சீராக பேண வலிவகுக்கின்றன. மேலும், முக்கியமாக கேரட் உட்கொள்வதால், மேனி மிகவும் பொலிவான தோற்றத்தை பெறுவதுடன், முதுமை தோற்றமும் சரி செய்யப்படுகிறது.
கேரட்டில் பீட்டா கரோடீன் (Beta Carotene) காணப்படுகிறது. அவை உடலினுள் விட்டமின் K ஆக மாற்றப்பட்டு பழுதடைந்த தோல் திசுக்களை (Skin Tissue) சரி செய்வது மட்டுமல்லாமல், சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் கடுமையான கதிர்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.
பீட்ரூட் (Beetroot)
பீட்ரூட்டில் நைட்ரேட்கள் (Nitrates) அடங்கியுள்ளன. அவை இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கின்றன.
பீட்ரூட் பலவகையான புற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கின்றது. பீட்ரூட்டில் காணப்படும் பீடைன் (Betaine) எனும் பதார்த்தம், ஈரலில் உண்டாகும் நச்சுக்களை அகற்றும் வல்லமை கொண்டது.
அத்துடன், பீட்ரூட் உண்பதால் தசைகளின் வலிமை அதிகரிக்கப்படுவதோடு, உடலுக்கு நல்ல உறுதியும் கிடைக்கிறது. மேலும், இது உணவு சீராக சமிபாடடையவும் இரத்தத்தின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
பாகற்காய் (Bitter Gourd or Bitter Melon)
பாகற்காயில் காணப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மற்றும் ஆண்டி ஒக்சிடெண்ட் பதார்த்தங்கள் தோல் பிரச்சினைகளையும் இரத்த கோளாறுகளையும் குணப்படுத்த உதவுவதுடன், இரத்தத்தில் இருக்கும் நச்சுப்பதார்த்தங்களை அகற்றி இரத்தத்தை தூய்மைபடுத்துகின்றன.
பாகற்காய் பானம் அருந்துவதன் மூலம் இயற்கையாகவே முடி உதிர்வை குறைக்க முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன.
பாகற்காயில் காணப்படும் இன்சுலின் (Insulin) போன்ற சில இரசாயண பதார்த்தங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைத்து நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன.
பாகற்காய் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுவதுடன் உணவு செரிமானத்துக்கு இது பெருதும் உதவுகிறது.
வட்டக்காய் (Pumpkin)
வட்டக்காயில் நார்ச்சத்து, பொட்டாசியம், விட்டமின் C என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவை இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் துணைபுரிகின்றன.
வட்டக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஒரு மரக்கறி ஆகும். மேலும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி சீராக பேண வழிவகுக்கிறது.
இக்காயில் உட்கொண்டிருக்கும் பீட்டா கரோடீன், விட்டமின் A ஆக மாற்றப்படுகிறது. அவை கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
அத்தோடு, பீட்டா கரோடீன் மேனியை இளமையாக வைத்திருப்பதற்கும் தோளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் துணைபுரிகிறது.
வெள்ளரிக்காய் (Cucumber)
வெள்ளரிக்காயில் 95% நீர்தான் உள்ளது. இதில் இருக்கும் விட்டமின் E தோலின் திசுக்கள் உற்பத்தியை மேம்படுத்தி, தோலில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கவல்லது.
அத்துடன், கண்ணின் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செலுத்துவதுடன் பார்வையை அதிகரிக்கிறது. வெள்ளரிக்காய் உடல் பருமனை குறைப்பதற்கான ஒரு சிறந்த நிவாரணி ஆகும்.
வெள்ளரிக்காயில் புரதம், மக்னீசியம், விட்டமின் A, விட்டமின் C, விட்டமின் K, விட்டமின் B1, விட்டமின் B2, விட்டமின் B6, விட்டமின் B5, போலிக் அமிலம் மற்றும் சிலிக்கன் என்பன அடங்கியுள்ளன.
ஆகவே, பற்கள் நகங்கள் மற்றும் எலும்புகளின் உறுதியை மேம்படுத்துகிறது.
முட்டைகோஸ் (Cabbage)
முட்டைகோஸில் இருக்கும் சல்ஃபோரபேன் (Sulforaphane) எனும் இரசாயணப்பொருள் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
இதிலிருக்கும் கோலைன் (Choline) எனும் அத்தியாவசிய ஊட்டச்சத்தானது மூளை வளர்ச்சியை அதிகரித்து கூர்மையான ஞாபக ஆற்றலை அதிகரிக்கச்செய்கிறது.
முட்டைகோஸானது மார்பகம், கல்லீரல், பெருங்குடல், வயிறு, நுரையீரல் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கக்கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.
இது இருதய நோய்கள் மற்றும் இரத்த சுற்றோட்ட கோளாறுகளை சரி செய்யக்கூடிய ஒரு மரக்கறி ஆகும்.
முள்ளங்கி (Radish)
முள்ளங்கி இரத்தத்தில் நச்சுப்பொருட்கள் சேர்வதை தடுத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். மேலும், மூலநோயை குணப்படுத்தும்.
சிறுநீரக கற்கள் உருவாகி இருப்போருக்கு முள்ளங்கி ஒரு சிறந்த மருந்தாகும். வைத்தியர்கள் முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பரிந்துரை செய்கிறார்கள்.
ஏனெனில், இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவை குறைத்து சீராக வைத்திருக்க உதவும். உடல் சூட்டில் அவதிப்படுவோர் அவசியம் உண்ண வேண்டும்.
உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுமட்டுமன்றி சிறுநீரப் பிரச்சினைகளை போக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவாகும் முள்ளங்கி.
உண்மையில் சொல்லப்போனால், சிறிய முள்ளங்கியாக (Little Radish) இருந்தாலும் அதன் பலன்கள் மிக அதிகமாக உள்ளது.
முடிந்தளவு எப்போதும் புதிய முள்ளங்கியை (Fresh Radish) சமைத்து உண்ண வேண்டும். அப்போது தான் அதன் முழு நன்மையும் உடலுக்கு கிடைக்கும்.
புடலங்காய் (Snake Gourd)
புடலங்காய் ஒரு சிறந்த சளி மருந்தாக தொழிற்படக்கூடியது. சளித்தொல்லை மற்றும் மூச்சுப்பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.
வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையை போக்கக்கூடிய சிறந்த நிவாரணி புடலங்காய். மூலநோய் இருப்பவர்கள் கட்டாயம் உண்ண வேண்டிய ஒரு மரக்கறி ஆகும்.
மூலநோயை குணப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது. நீண்டகாலமாக இருக்கும் நெஞ்செரிச்சலை குணப்படுத்தக்கூடியது.
மேலும், இதை உண்பதால் உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும். இது குறைந்த கலோரி உணவென்பதால், உடல் நிறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
ஆகவே, நீரிழிவு நோய் இருப்பவர்கள் புடலங்காயை தனது உணவில் சேர்த்துக்கொள்வது மிக சிறந்தது.
வெண்டைக்காய் (Lady’s Finger)
நீரிழிவு நோயை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய ஒரு மரக்கறி வெண்டைக்காய். உடலில் உண்டாகும் மேலதிக கொழுப்பை குறைக்கக்கூடியது.
மேலதிக கொழுப்பை நீக்குவதால் நுண்குழாய்களில் இரத்த ஓட்ட செயற்பாடு சீராக நடைபெறும். இதனால் இருதய பாதிப்புகள் குறைக்கப்பட்டு இருதய நோய்கள் வருவதிலிருந்து காப்பாற்றப்படுகிறது.
இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளது. ஆகவே, சமிபாடு சீராக நடைபெற உதவுவதோடு, மலச்சிக்கல் பிரச்சினைகளிலிருந்து காக்கின்றது.
இதில் விட்டமின் C நிறைந்துள்ளது. அத்துடன், விட்டமின் A யும் அதிகம் உள்ளது. மேலும், இதில் அடங்கியிருக்கும் ஆண்டி ஒக்சிடெண்டுகள் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.
அனைத்து வகையான மரக்கறிகளிலும் நிறைய மருத்துவ பயன்கள் உள்ளன. குறிப்பாக, புதிய மரக்கறிகளில் (Fresh Vegetables) சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, நாம் எப்போதுமே புதிய பழங்களையும் மரக்கறிகளையும் (Fresh fruits and vegetables) உணவில் சேர்த்துக்கொள்ள தவரவிடக்கூடாது.
இதையும் வாசிக்க:
முக்கியமாக நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்கிற மரக்கறிகள் சிலவற்றின் மருத்துவ குணங்களை இங்கே பார்த்தோம்.
மேலும், மரக்கறிகள் பல நோய்களுக்கு மருந்தாக அமைந்தாலும், ஒரு சில நோய்களுக்கு உட்கொள்ள கூடாத நிலையும் உண்டு. அவற்றை நன்கு அறிந்து உட்கொள்வது சிறந்தது.