நமது பண்டைய தமிழர்கள் கடைபிடித்த வாழ்க்கை முறையானது அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் வழிவகுத்தது. அவர்கள் பின்பற்றிய அனைத்து பழக்க வழக்கங்களிலும் கண்டிப்பாக ஒரு அறிவியல் சார்ந்த காரணம் இருக்கும். குறிப்பாக, பாரம்பரியமான கிருமி நாசினிகள் (Traditional Disinfectants) அவர்கள் சுத்தமாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் துணையாக இருந்துள்ளன.
அவர்களின் ஆன்மீக செயற்பாடுகளுக்கு பின்னால் கூட, அறிவியல் விளக்கம் நிச்சயமாக இருக்கும். அதனையே நாம் தற்போது தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்திவருகிறோம்.
எனினும், நாம் எப்போதாவது செய்யும் விடயங்களை அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து செய்துவந்தமையால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்.
நம் முன்னோர் வீட்டையும் வீட்டு சூழலையும் கிருமிகளிலிருந்து (Germs) பாதுகாத்துக்கொள்ள தினமும் பயன்படுத்திய பாரம்பரியமான கிருமி நாசினிகளை (Traditional Disinfectants) இனி பார்க்கலாம்.
1. மாட்டுச் சாணம் (Cow Dung)
அக்காலத்தில் நமது பெரும்பாலான முன்னோர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுப்பட்டிருந்தார்கள். அவற்றில் மாடுகளுக்கு ஒரு பாரிய முக்கியத்துவம் இருந்தது.
மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஆன்மீகத்திற்கும் மாடுகளின் பங்களிப்பு அதிகமாக இருந்தமையே இதற்கு காரணம். அக்காலத்தில் அனைத்து மண் வீடுகளுமே மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்டிரிக்கும்.
இதனால் அவ்வீடு முழுமையாக கிருமிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும்.
ஏனெனில், மாட்டுச் சாணம் ஒரு சிறந்த கிருமிநாசினி (Disinfectant) ஆகும்.
மேலும், தினமும் காலையில் பெண்கள் சாணத்தை நீரில் கரைத்து வீட்டு வாசலில் தெளித்து கோலமிடுவார்கள்.
இவ்வாறு தெளித்திருக்கும் போது, நாம் வெறும் காலோடு வீட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே செல்லும் போது, நமது காலில் இருக்கும் அனைத்து கிருமிகளும் மாட்டுச் சாணம் கால் முழுதும் படும் போது இறந்துவிடும்.
இதனால் வீட்டிற்கு உள்ளே கிருமிகளின் தாக்கம் ஒரு போதும் இருக்காது. எனினும், தற்போது இச்செயற்பாடு மார்கழி மாதத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு கவலைக்குறிய விடயம் என்றே கூறவேண்டும்.
2. மாட்டுக் கோமியம் (Cow Urine)
முன்பெல்லாம் காலை வேளையில் மாடுகளை வளர்ப்போர் அதன் தொழுவத்தை சுத்தம் செய்வார்கள். அப்போது மாட்டு கோமியம் கலந்த சாணத்தை கைகளிலே எடுத்து சுத்தம் செய்வார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் கோமியமும் சாணமும் உடம்பில் பல்வேறு இடங்களில் படும். இதன்போது உடம்பில் உள்ள கிருமிகள், முக்கியமாக கைகளில் உள்ள கிருமிகள் இறந்துவிடும்.
சாணம் எவ்வாறு கிருமிநாசினியாக கொள்ளப்படுகிறதோ அதேபோன்று கோமியமும் ஒரு சிறந்த கிருமிநாசினியாகும்.
அத்துடன், முன்னோர்கள் கோமியத்தை வீட்டின் உள்ளே அனைத்து இடங்களிலும் தெளிப்பதுடன் வீட்டை சுற்றியும் தெளிக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது.
கிருமிகளிலிருந்து வீடு முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதற்காகவே, இவ்வாறு செய்தார்கள் என்பது அறிவியல் சார்ந்த உண்மையாகும்.
3. வேப்பிலை (Neem)
வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இலை மட்டுமன்றி வேப்பம் மரத்தின் பூ, காய், பட்டை, வேர் மற்றும் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.
முக்கியமாக, இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக தொழிற்படுகிறது.
வேப்பம் மரம் இருக்கும் இடங்களில் அம்மரத்தை சுற்றியுள்ள வளிமண்டலமானது, மிகவும் சுத்தமான காற்றை கொண்டிருக்கும்.
ஏனெனில், அங்கு உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளை கொல்லும் ஆற்றம் வேப்பிலைக்கு உள்ளது. பொதுவாக தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வேப்பிலையை அரைத்து பூசுவார்கள்.
இதன்போது, தோலில் இருக்கும் கிருமிகளை அழித்து, பிறகு அந்நோயை குணப்படுத்தும் சக்தி வேப்பிலைக்கு உண்டு.
4. மஞ்சள் (Turmeric)
இதுவும் மிகச் சிறந்த ஒரு கிருமிநாசினியாகும். தற்போது மஞ்சளை நாம் உணவில் மட்டுமே சேர்த்து வருகிறோம். எனினும், மஞ்சளிலும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.
அவற்றில் கிருமிநாசினியாக தொழிற்படும் பங்கு அதிகமாகவே உள்ளது. முன்பெல்லாம் பெண்களின் அழகை அதிகரிக்கும் அழகு சாதனப்பொருட்களில் முதலிடம் பிடித்தது இந்த மஞ்சள் தான்.
ஏனெனில், தினமும் அக்கால பெண்கள் அரைத்த மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிப்பார்கள். அவ்வாறு மஞ்சள் பூசி குளிக்கும் போது உடலில் உள்ள கிருமிகள் கொல்லப்படுவதுடன் மேனி பொலிவுபெறும்.
குறிப்பாக பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி சற்றி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாக வரும். மேலும், முகப்பருக்கள் இருந்தால் அவற்றை முற்றிலும் போக்கும் வல்லமை கொண்டது இந்த மஞ்சள்.
மஞ்சள் தூளை நிரீல் கரைத்து வீடு முழுதும் தெளிக்கும் வழக்கம் நம் முன்னோரிடம் இருந்து வந்துள்ளது.
இவ்வாறு செய்வதால் வீட்டிலுள்ள அனைத்து கிருமிகளும் அழிக்கப்படும்.
வீடு எப்போதும் சுத்தமாக இருக்கும். தற்போது இப்பழக்கமும் குறைந்து வருகிறதென்றே கூறவேண்டும்.
5. துளசி (Tulsi)
துளசி பொதுவாக இந்துக்களின் வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் ஒரு செடியாகும். ஆன்மீகரீதியாக துளசி பெறும் பங்கு வகிப்பதே இந்துக்கள் வீட்டில் வளர்க்கப்படுவதற்கான மிக முக்கிய காரணமாகும்.
இருந்தபோதிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் ஒரு முக்கிய பொருளாக துளசி கருதப்படுகிறது. ஆம், பல்வேறுபட்ட மருத்துவ குணங்களை கொண்டுள்ள துளசி ஒரு சிறந்த கிருமிநாசினி (Best Disinfectant) ஆகும்.
துளசி வளர்ந்திருக்கும் இடத்தை சுற்றியுள்ள காற்று மண்டலமானது எப்போதும் தூய்மையாக இருக்கும். இதிலுள்ள மருத்துவ வேதிப்பொருட்கள் கிருமிகளை அழித்து மாசுக்களிலிருந்து வளியை சுத்திகரிக்கிறன.
மேலும், துளசி வீட்டு முற்றத்தில் வளர்க்கப்பட்டால் விஷப்பூச்சிகள் வீட்டை நெருங்காது. மேலே குறிப்பிட்ட பாரம்பரியமான கிருமி நாசினிகள் (Traditional Disinfectants) அனைத்தும் பண்டைய தமிழர்கள் தினமும் தமது வாழ்வில் பயன்படுத்திய முக்கிய பொருட்கள் ஆகும்.
இதனால் அவர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வாழ்ந்தார்கள். ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுக்கு இருக்கும் விலைமதிக்க முடியாத சொத்து.
நம் முன்னோர்கள் கற்றுத்தந்த பழக்க வழக்கங்களை கடைபிடித்தாலே போதும் நாம் ஆரோக்கியாக வாழ்வதற்கு. எனினும், தற்போதைய அவசர வாழ்க்கையில் அவற்றை பின்பற்றுவது சற்று கடினம் தான்.
இதையும் வாசிக்க:
- மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்
- ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்
முடிந்தவரை அவற்றை அறிந்து, அதனை நமது வாழ்வில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் நாமும் ஒரு சிறந்த வாழ்க்கையை கண்டிப்பாக வாழலாம்.