Smart Tamil Trend

Trending Now

Google Search

The success journey of young music director » இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்

இளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்

Spread the love

இந்திய தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் அனிருத் ரவிசந்தர் ஆவார். மிக சிறிய வயதில் புகழின் உச்சிக்கே சென்றவர் என்று சொல்லலாம். தனது இசையால் இளைஞர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இவரது இசை ஒரு வித்தியாசமான பாணியில் அமைக்கப்படுவதே இதற்கு காரணம்.

இவர் கடந்து வந்த வெற்றிப் பயணத்தை பற்றி இனி பார்ப்போம்.

பிறப்பு

அனிருத் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ரவி ராகவேந்திரா. அவரும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் ஆவார். அன்ருத்தின் தாயாரின் பெயர் லக்ஷ்மி ரவிசந்தர் ஆகும். தாயார் ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார்.

மேலும் இவருக்கு வைஷ்ணவி என ஒரு அக்காவும் உண்டு. அத்துடன் அனிருத் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் மருமகனும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

அனிருத் கே.கே நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பாலா பவண் எனும் பாடசாலையில் கல்வி கற்றார். சிறிய வயதிலேயெ இசையில் அதிகம் ஆர்வம் இருந்ததால் தனது பாடசாலையின் சின்க்ஸ் (Zinx) எனும் இசைக்குழுவில் இணைந்திருந்தார்.

அவர் தனது 10 வது வயதில் இசையமைக்க தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு சென்னை லொயோலா கல்லூரியில் (Loyola College) தனது பீ.கொம் பட்டத்தை பெற்றார்.

அத்துடன் லண்டன் ட்ரினிடி இசைக்கல்லூரியில் (Trinity College of Music) பியானோ கற்றார். மேலும் சென்னை சவுண்ட்டெக் மீடியாயில் (Soundtech-media) ஒலி பொறியியல் டிப்ளோமாவை (Sound engineering diploma) பெற்றார்.

அனிருத் கர்நாடக இசை கற்றதோடு கர்நாடக இணைவு இசைக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இசையில் பேரார்வம் கொண்ட அனிருத்தின் கனவாக தான் ஒரு சிறந்த இசைக் கலைஞராக வர வேண்டுமென்றே இருந்தது.

அதற்கு துணையாகும் வகையில் தனது பாடசாலை நாட்களில் இசைப்புயல் A.R ரஹ்மான் அவர்கள் நடுவராக கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றினார்.

அந்த நிகழ்ச்சியில் அவரது இசைக்குழு மற்ற 5 இசைக்குழுக்களுடன் வென்றதோடு சிறந்த கருவியாக தொழிற்பட்டவர் எனும் விருதையும் பெற்றார்.

சினிமா வாழ்க்கையின் ஆரம்பம்

2012 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த மூணு (3) எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இப்படத்தை இயக்கியிருந்தார் அனிருத்தின் மாமன் மகளான ஐஸ்வர்யா R. தனுஷ் அவர்கள்.

இப்படத்தில் இடம்பெற்ற “வை திஸ் கொலவெரி டி” எனும் பாடல் அனிருத்தை உலகளவில் அறியவைத்ததோடு புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இப்பாடல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல் வெளியிடப்பட்டு சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்று வைரல் ஆனது. தற்போது வரை இப்பாடல் யூடியுப்பில் 211 மில்லியனுக்கும் அதிகமான வீவ்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பாடலின் புகழை பற்றி மேலும் கூறினால் இப்பாடல் வெளியான தருணத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த கௌரவ மன்மோகன் சிங் அவர்களால் இப்பாடலை பாடிய தனுஷ் அவர்கள் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர் நீச்சல் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அப்படத்திலுள்ள அனைத்து பாடல்களும் பிரபலம் ஆனது.

இந்நேரத்தில் யோ யோ ஹனி சிங் மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகிய சொல்லிசை கலைஞர்களை தமிழ் திரை இசையில் அறிமுகம் செய்தார் அனிருத்.

அதற்கு பின்பு 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வணக்கம் சென்னை பட பாடல்கள் வெளியானது. வெளியாகி சில நாட்களிலேயே ஐடியுன்ஸ் இந்தியா டாப் ஆல்பத்தில் (iTunes India Top Album) முதல் இடத்தில் வந்தது.

இப்பட பாடல்களில் பல புதிய பாடகர்கள் குறிப்பாக சர்வதேச கலைஞர்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இதற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு இசையமைத்தார் அனிருத். படம் பெரிதும் வெற்றி பெறவில்லையெனினும் இசைக்கு நேர்மறையான கருத்துக்களே கிடைத்தன.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் வெளியானது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதற்கு அனிருத்தின் இசையும் ஒரு பாரிய பங்களிப்பை செய்திருந்தது.

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தேயில் இணைந்தார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் பாரிய அளவில் ஹிட் ஆனது. அத்துடன் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து முதன் முறையாக தளபதி விஜயுடனும் இயக்குநர் A.R முருகதாஸுடனும் கத்தி திரைப்படத்தில் பணியாற்றினார். இப்படத்திலுள்ள எல்லா பாடல்களும் நன்கு பேசப்பட்டதுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் முனுமுனுக்கும் வகையில் இப்படத்தின் “செல்பி புல்ல” பாடல் அமைந்திருந்தது.

காக்கி சட்டை திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை சிவகார்த்திகேயனுடன் கைக்கோர்த்தார் அனிருத்.

அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மாரி, நானும் ரவுடிதான், வேதாளம், தங்க மகன் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். அனைத்து பட பாடல்களும் மெகா ஹிட் ஆனதுடன் அதிக பாராட்டுக்களையும் அனிருத்திற்கு பெற்றுக்கொடுத்தன.

அவற்றில் தல அஜித் அவர்களின் வேதாளம் பட தீம் இசை சக்கை போடு போட்டது என்றே கூறவேண்டும். அஜித் அவர்களே அனிருத்தை மிகவும் பாராட்டியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்த முதல் படமும் இதுதான்.

2016 ஆம் ஆண்டு ரெமோ, ரம் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருப்பார். இவை இரண்டில் ரெமோ மிகவும் ஹிட் ஆனது. அதன் “செஞ்சிடாலே” பாடல் இளைஞர்கள் அனைவரும் மெய்மறக்கும் விதமான ஒரு வித்தியாசமான முறையில் அமைத்திருந்தது குறிப்பிடவேண்டிய ஒரு விடயமாகும்.

அதற்கு பின்பு விவேகம், வேலைக்காரன் ஆகிய படங்களுக்கு இசை வழங்கியிருந்தார். இரு படங்களின் பாடல்களும் அனிருத்தை மேலும் ஒரு படி மேலே கொண்டுசென்றது.

2018 ஆம் ஆண்டு முதன் முதலாக சூர்யாவின் படமான தானா சேர்ந்த கூட்டம் எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். அதன் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

அதே ஆண்டு கோலமாவு கோகிலா மற்றும் சூப்பர்ஸ்டாரின் பேட்ட ஆகிய திரைப்படங்களுக்கு இசை வழங்கினார். இவற்றின் பாடல்களும் கூட நல்ல நேர்மறையான விமசனங்களை பெற்றுக்கொடுத்தன.

கடந்த ஆண்டு தும்பா என்ற ஒரு தமிழ் படத்திற்கு மாத்திரமே இசையமைத்தார். எனினும் மற்ற மொழி படங்களுக்கு இசையமைத்த வண்ணமே இருந்தார்.

இவ்வாண்டு இறுதியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்களும் ஹிட் ஆனதோடு மீண்டும் நற்பெயரை வாங்கிக்கொடுத்தன.

பெற்ற விருதுகள்

விருதுகள்

எண்ணிக்கை

விஜய் விருதுகள்

5

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்

8

எடிசன் விருதுகள்

6

தென்னிந்திய ஃபிலிம் ஃபெயார் விருதுகள்

1

ஏனைய விருதுகள்

16

 

அனிருத் மொத்தமாக 36 விருதுகளை பெற்றுள்ளதோடு 15 விருதுகளுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார்.

பின்னணி பாடகராக தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கண்ணடம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

ஒரு சுயாதீன கலைஞராக தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.

இளைஞர்களின் இசை தாகத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் பாடல்களை உருவாக்கி வழங்கிக்கொண்டிருக்கிறார் அனிருத்.

மேலும் குறுகிய காலத்திலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

தமிழ் மொழி மட்டுமன்றி பிற மொழிகளிலும் இவரது திறமை வெளிக்காட்டப்பட்டுள்ளது. இவரது எதிர்கால பணிகள் சிறப்பாக அமைய எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *