இந்திய சினிமாவில் அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிற, உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி ஆகும். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷ்ன் நிறைந்த ஒரு வரலாற்று காவிய திரைப்படமாகும். மாபெரும் நடிகர்களை கொண்ட இப்படத்தை சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். கொணிடெலா புரொடக்ஷன் கம்பனியின் உரிமையாளரும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் இதை தயாரித்திருக்கிறார்.
நடிகர்கள்
- சிரஞ்சீவி
- விஜய் சேதுபதி
- கிச்சா சுதீப்
- அமிதாப் பச்சன்
- ஜகபதி பாபு
- ரவி கிஷான்
- நயன்தாரா
- தமன்னா
- அனுஷ்கா ஷெட்டி
- நிஹாரிகா கொணிடெலா
- ப்ராமஜி
1846 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக 5000 விவசாயிகள் எழுந்த போது ஏற்பட்ட கிளர்ச்சியின் முக்கிய சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நரசிம்மா ரெட்டியாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார்.
இப்படம் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் R. ரத்ணவேலு. படத்தொகுப்பு பணிகளை A. ஸ்ரீ்கர் பிரசாத் மேற்கொண்டுள்ளார். படத்தயாரிப்பு வடிவமைப்பாளராக ரஜீவன் தொழிற்பட்டிருக்கிறார். அஞ்சு, உத்தரா மேனன் மற்றும் சுஷ்மிதா கொணிடெலா ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள். கிரேக் பவெல் (Greg Powell), லீ விட்டகெர் (Lee Whittaker), ராம் மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் சண்டை காட்சிகளை இயக்கியிருக்கிறார்கள்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக ராம் சரண் கூறியிருந்தபோதிலும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இசையமைப்பாளராக A.R ரஹ்மான் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருந்தார். எனினும் மற்ற படங்களில் பரபரப்பாக இருந்ததால் அமித் த்ரிவேதி (Amit Trivedi) இசையமைப்பாளராக இணைத்துக்கொள்ளப்பட்டார். பிண்ணனி இசையை வழங்கியுள்ளார் ஜுலியஸ் பாக்கியம் (Julius Packiam) அவர்கள்.
சிரிவெண்ணிலா சீதாராமா சாஸ்த்ரி தெலுங்கில் பாடல்களை எழுதியுள்ளதோடு ஸ்வானந்த் கிர்கிரே (Swanand Kirkire) ஹிந்தி மொழியில் எழுதியுள்ளார். தமிழில் கார்கியும் கன்னடத்தில் அசாட் வரதராஜும் மலையாளத்தில் சிஜு துரவூரும் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
இப்படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) காக மாத்திரம் சுமார் 45 கோடி இந்திய ரூபாய் செலவிடபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் உலகிலுள்ள முக்கியமான 17 ஸ்டூடியோக்களில் விசுவல் எபெக்ஸ் பணிகள் நடந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் 3800 விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 18 ஆம் திகதி இப்படத்தின் ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் வெளியாகியிருந்தது. இதுவரை தமிழில் 3.4 மில்லியன் முறையும் தெலுங்கில் 13 மில்லியன் முறையும் பார்க்கப்பட்டுள்ள நிலையில் மலையாளத்தில் இரண்டு இலட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் முறையும் ஹிந்தியில் 17 மில்லியன் முறையும் பார்க்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் 1.4 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
பெறும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ள இப்படம் வருகிற ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது. படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்.