MS தோனி (MS Dhoni) என பொதுவாக அழைக்கப்படும் மஹேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தரத்தை முதலிடத்துக்கு கொண்டுவர மிகவும் பாடுபட்டார். இவரை ரசிகர்கள் கெப்டன் கூல் (Captaincool) என அன்போடு அழைப்பார்கள்.
இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கும் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் (Test) போட்டிகளுக்கும் இந்திய கிரிக்கெட் அணி தலைவராக கடமை புரிந்தார். இவர் சிறந்த வலது கை துடுப்பாட்ட வீரர். அத்துடன் சிறந்த ஒரு விக்கெட் காப்பாளர் (Wicket Keeper).
மஹேந்திர சிங் தோனியின் ஆரம்ப வாழ்க்கை (Early life of Mahendra Singh Dhoni)
தோனி 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி பீஹாரில் (Bihar) இரான்சி (Ranchi) எனும் இடத்தில் பிறந்தார். அவரின் தந்தையின் பெயர் பான் சிங் (Pan Singh) தாயாரின் பெயர் தேவ்கி தேவி (Devki Devi). அவருக்கு நரேந்திர சிங் தோனி (Narendra Singh) என்ற பெயருடன் சகோதரனும் ஜயந்தி குப்தா (Jayanthi Gupta) என்ற பெயருடன் சகோதரியும் உண்டு.
தோனி இரான்சியின் ஸ்யாமலி (Shyamali ) காலனியில் (Colony) உள்ள ஜவஹர் வித்யா மந்திர் (Jawahar Vidya Mandir) எனும் பாடசாலையில் கல்வி கற்றார். அப்போது அவர் பூப்பந்தாட்டம் (Badminton) மற்றும் கால்பந்து விளையாட்டு (Football) ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் மாவட்ட மற்றும் கழக (Club) போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டார்.
கால்பந்து அணியில் அவர் இலக்குக்காவலராக (Goalkeeper) இருந்தார். அதேநேரத்தில் அவரது கால்பந்து பயிற்சியாளர் தோனியை உள்ளூர் கிரிக்கெட் கழக (Local Cricket Club) போட்டிகளில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுப்பினார். அதன்போது அவரின் விக்கெட் காப்பு திறனால் எல்லோராலும் ஈர்க்கப்பட்டார்.
அதன் பின்பு 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை கமாண்டோ கிரிக்கெட் கழகத்தில் (Commando Cricket Club) விக்கெட் காப்பாளராக இருந்தார். 1997/1998 காலப்பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட வினோ மன்கட் கிண்ண (Vinoo Mankad Trophy) சாம்ப்பியன்ஷிப் (Championship) போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக விளையாடினார். தனது 10 ஆம் தர கல்விக்கு பிறகு கிரிக்கெட் மீது அதிக கவனம் செலுத்தினார்.
பிறகு 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை கராக்பூர் ரயில் நிலையத்தில் (Kharagpur Railway Station) பயணச்சீட்டு பரிசோதகராக (Travelling Ticket Examiner) பணி புரிந்தார். அவர் கொஞ்சம் குறும்புக்காரர் ஆவார். அங்கு பணி புரியும் போது அவர் செய்த குறும்பு வேலை இன்னும் ரசிகர்களால் பேசப்படுகிறது.
என்னவென்றால் ரயில் நிலைய விடுதியில் தங்கியிருக்கும் போது தோனியும் அவரது நண்பர்களும் வெள்ளை நிற துணியால் மூடிக்கொண்டு அந்த ரயில் நிலைய வளாகத்தை நடு இரவில் சுற்றியிருக்கிறார்கள். அதை பார்த்த இரவு காவலர்கள் வளாகத்தை சுற்றி பேய்கள் நடமாடுகின்றன என பயந்து நடுங்கியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் அந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹேந்திர சிங் தோனியின் ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கை (Early cricket career of Mahendra Singh Dhoni)
1998 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட மத்திய நிலக்கரி நில (Central Coal Fields Limited (CCL)) அணிக்கு தேவல் சஹாய் (Deval Sahay) என்பவரால் தெரிவு செய்யப்பட்டார். தேவல் சஹாய் அவர்கள் ஷீஷ் மஹால் கிரிக்கெட் போட்டிகளில் (Sheesh Mahal Tournament) அடிக்கும் ஒவ்வொரு ஆறு ஓட்டங்களுக்கும் 50 ரூபாய் பரிசளிப்பதாக கூறினார்.
அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட தோனி சி.சி.எல் (CCL) அணியை முதல் நிலைக்கு கொண்டுவர உதவி புரிந்தார். தோனியின் அர்ப்பணிப்பு மற்றும் அபார ஆட்டத்தை பார்த்த தேவல் சஹாய் அவர்கள் பீஹார் அணிக்கு தெரிவு செய்வதற்காக பீகார் கிரிக்கெட் சங்கத்துக்கு (Bihar Cricket Association) பரிந்துரை செய்தார். தேவல் சஹாய் என்பவர் பீஹார் கிரிக்கெட் சங்கத்தின் முன்னால் துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தநேரத்தில் இரான்சி மாவட்ட கிரிக்கெட் தலைவராக இருந்த தேவல் சஹாய் அவர்கள் தோனியை இரான்சி அணியில் சேர்ப்பதற்கு கருவியாக செயல்பட்டார்.
அதன்பின் பீஹார் இரஞ்சி அணிக்காக விளையாட ஆரம்பித்த தோனி 1998/1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 5 போட்டிகளில் 176 ஓட்டங்கள் பெற்றார். எனினும் அவரது அணி கால் இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை.
அதற்குபின் 1999/2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற கூச் பெஹார் கிண்ண (Cooch Behar Trophy) இறுதி போட்டிக்கு முன்னேரி அணியின் மொத்த ஓட்டங்கள் 357 ஆக இருக்க அவரது அணிக்காக தோனி 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அந்த கூச் பெஹார் கிண்ண போட்டிகளில் 5 அரைச்சதங்கள் உட்பட மொத்தமாக 488 ஓட்டங்கள் பெற்றார்.
தோனி 1999/2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரஞ்சி கிண்ண (Ranji Trophy) போட்டியில் அறிமுகமானார். முதலாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அஸ்ஸாம் கிரிக்கெட் அணிக்கு எதிராக 68 ஓட்டங்களை பெற்றார்.
அவர் மொத்தமாக 5 போட்டிகளில் 283 ஓட்டங்களை பெற்றார். 2000/2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெங்கல் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் முதலாவது சதத்தை பெற்றார். அதற்கு பிறகு பெரிதாக பிரகாசிக்காத தோனி 2001/2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ரஞ்சி போட்டிகளில் 5 அரைச்சதங்களை மட்டுமே பெற்றார்.
2002/2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ரஞ்சி கிண்ண போட்டிகளில் 3 அரைச்சதங்களையும் தியொதர் கிண்ண (Deodhar Trophy) போட்டிகளில் 2 அரைச்சதங்களையும் பெற்றார். இதன்போது அவரது அபார ஆட்ட முறையாலும் அணியின் கீழ் வரிசைக்கு ஆற்றிய பங்களிப்பாலும் இனங்காணப்பட்டார்.
2003/2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அஸ்ஸாம் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த முதலாவது போட்டியில்128 ஓட்டங்களை பெற்றார். அதே காலகட்டத்தில் பகுதியாக கிழக்கு மண்டல அணிக்காக (East Zone Squad) தியோதர் கிண்ண போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் 1 சதம் உட்பட 244 ஓட்டங்களை பெற்றார்.
இதற்கு பிறகு கிழக்கு மண்டல அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துலீப் கிண்ண (Duleep Trophy) இறுதி போட்டக்கு தெரிவு செய்யப்பட்டார். அந்த போட்டியில் போராடி அரைச்சதம் பெற்றார். இதன்போது தோனியின் திறமைகள் இந்திய கிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) சிறிய நகரங்களில் திறமைகளை கண்டரியும் பிரிவான திறமை வள மேம்பாட்டு பிரிவால் (Talent Resource Development Wing) இனங்காணப்பட்டார்.
திறமை வள மேம்பாட்டு அதிகாரியான பிரகாஷ் போதார் (Prakash Poddar) ஜார்கண்ட் மாநிலத்துக்காக (Jharkhand State) விளையாடிய தோனியின் ஆட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு, தேசிய கிரிக்கெட் குழுவிற்கு அறிக்கை சமர்பித்தார்.
இந்திய A அணிக்கு தெரிவாகுதல் (Selection to Indian A team)
2003/2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோனியின் முயற்சிகள் இனங்காணப்பட்டு இந்திய A அணிக்கு தெரிவு செய்யப்பட்டார். இந்திய A அணி, சிம்பாப்வே மற்றும் கென்யா அணிகளிக்கிடையில் போட்டிகள் நடந்தன. இதன்போது சிறந்த விக்கெட் காப்பினை மேற்கொண்ட தோனி 7 பிடிகளையும் (Catches) 4 ஸ்டம்பிங்களையும் (Stumpings) செய்தார்.
அதன்பின்பு கென்யா, இந்திய A அணி மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கிடையிலான போட்டிகளில் 1 அரைச்சதத்தையும் 2 சதத்தையும் பெற்று அனைவராலும் நன்கு அறியப்பட்டார்.
சர்வதேச போட்டிகளுக்கு தெரிவாகுதல் (Selection to International competitions)
தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வந்த தோனியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2004/2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த போட்டிகளுக்கு தெரிவு செய்தார்கள். இதன்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு முதலாவது ஒருநாள் போட்டியில் தோனி விளையாடினார்.
2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். காலப்போக்கில் மிகச்சிறப்பாக விளையாடி புகழையும் பாராட்டுக்களையும் பெற்றதுடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தனது அணியை சிறப்பாக வழிநடத்தி உலக கிண்ணம், இருபதுக்கு இருபது உலக கிண்ணம், ஆசிய கிண்ணம் மற்றும் சாம்ப்பியன்ஷிப் கிண்ணம் ஆகிய அனைத்து முக்கிய கிண்ணங்களையும் வென்று இந்திய அணியின் பெருமையை உலகரிய செய்தார்.
இந்திய அரசாங்கம் தோனியை கௌரவிக்கும் முகமாக 2007 ஆம் ஆண்டு இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (Rajiv Gandhi Khel Ratna Award) 2009 ஆம் ஆண்டு நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஸ்ரீ் விருது மற்றும் 2018 ஆம் ஆண்டு மூன்றாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது.
ஆரம்ப காலத்தில் அதிக கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்த தோனி தனது திறமையால் நற்பெயரையும் புகழையும் அடைந்திருக்கிறார். M.S தோனி அவர்கள் இந்திய அணிக்கு கிடைத்த முத்து என்றே கூறலாம்.
மேலும் வாசிக்க:
- கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்
- விராட் கோலி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்