Smart Tamil Trend

Trending Now

Google Search

Life journey of actor Karthi » நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

நடிகர் கார்த்தியின் வாழ்க்கைப் பயணம்

Spread the love

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு  நடிகர் தான் கார்த்தி அவர்கள். அவரது முழுப்பெயர் கார்த்திக் சிவகுமார்.

எனினும், அவர் பொதுவாக கார்த்தி என்றே அழைக்கப்படுகிறார்.

கார்த்தி அவர்களின் நடிப்பானது, ஒரு நடிகன் என்பதையும் தாண்டி நமக்கு நன்கு தெரிந்த நண்பன் போல அல்லது நமது குடும்பத்தில் ஒருவர் போல மிகவும் இயல்பாக இருக்கும்.

அதனால்தான், அவரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிறது.

அத்துடன், நடிகர் கார்த்தி தெரிவு செய்யும் கதைகளும் அவரின் இயல்பான நடிப்புக்கு பலம் சேர்க்கிறது.

இனி, கார்த்தி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

பிறப்பு

நடிகர் கார்த்தி 1977 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பிரபல நடிகர் சிவகுமார் ஆவார்.

கார்த்தியின் தாயாரின் பெயர் லக்ஷ்மி ஆகும்.

நாம் அனைவரும் அறிந்த நடிகர் சூர்யா, கார்த்தி அவர்களின் அண்ணனாவார். மேலும், கார்த்திக்கு பிருந்தா எனும் ஒரு தங்கையும் உண்டு.

பிரபல நடிகை ஜோதிகா நடிகர் கார்த்தியின் அண்ணி என்பதையும் குறிப்பிட வேண்டும்.

கார்த்தி தனது ஆரம்ப பாடசாலை கல்வியை பத்ம சேஷாத்ரி பால பவன் (Padma Seshadri Bala Bhavan) எனும் பாடசாலையில் கற்றார்.

அவரது இரண்டாம் நிலை பாடசாலை கல்வியை இந்திய சென் பெடெஸ் ஆஞ்லோ மேல்நிலைப்பள்ளியிலும் (St. Bede’s Anglo Indian Higher Secondary School) கற்றார்.

அத்தோடு, சென்னை க்ரிசண்ட் பொறியியல் கல்லூரியில் (Crescent Engineering College) இயந்திர பொறியியலில் இளநிலை பட்டத்தை (Bachelor’s Degree) பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கை

தனது பட்டப்படிப்பை முடித்த கார்த்தி சென்னையில் பொறியியல் நிபுணராக பணிபுரிந்தார்.

இதன்போது, தனது உயர் கல்வியை வெளிநாட்டில் தொடரவேண்டும் என கருதினார். அச்சமயத்தில் அமெரிக்காவில் உயர் கல்விக்கான புலமைப்பரிசிலைப் பெற்றார்.

அதன் பிறகு, நிவ்யோர்க்கில் பிங்காம்டொண் எனும் பல்கலைக்கழகத்தில் (Binghamton University) சேர்ந்தார்.

அங்கு தொழில்துறை பொறியியல் (Industrial Engineering) பிரிவில் அறிவியலில் முதுகலைப் பட்டம் (Master of Science) பெற்றார்.

அதுமட்டுமன்றி, முதுகலை பட்ட படிப்பின் போது கார்த்தி திரைப்பட உருவாக்கம் சம்பந்தமான பாடக்கோப்புகளையும் (Courses) கற்றார்.

நிவ்யோர்க்கில் இருந்த போது கார்த்தி வரைகலை வடிவமைப்பாளராக (Graphic Designer) பகுதி நேர வேலை செய்தார்.

அதன்பின், திரைப்பட உருவாக்கத்தை தனது தொழிலாக தொடர முடிவு செய்தார்.

இவ்வாறு தொடர முடிவு செய்த கார்த்தி அவர்கள் நிவ்யோர்க் மாநில பல்கலைக்கழகத்தில் (State University of New York) திரைப்பட உருவாக்கம் பற்றிய 2 அடிப்படையான பாடக்கோப்புகளை படித்தார்.

ஒரு நேர்காணலின் போது “ எனக்கு எப்போதும் தெரிந்தது நான் திரைப்படங்களில் இருக்கு வேண்டும் என்று; ஆனால் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உண்மையாகவே தெரியாது” என்று கூறினார்.

மேலும், “ எனக்கு திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும் அவற்றில் அதிக படங்களை பார்த்தேன்” என்றும் கூறினார்.

அத்தோடு, “ எனது தந்தை திரைப்படத் துறைக்கு வர முதல் நான் நல்ல கல்வியை பெற வேண்டும் என வலியுறுத்தினார்” எனவும் கூறியிருந்தார்.

 

சினிமா வாழ்க்கையின் ஆரம்பம் 

நடிகர் கார்த்தி ஒரு நடிகராக வேண்டும் என்பதை விட திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.

தான் ஒரு திரைப்பட இயக்குனராக வேண்டும் என விரும்பினார்.

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த கார்த்தி இயக்குனர் மணி ரத்னம் அவர்களை சந்தித்து ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய ஒரு வாய்ப்பை பெற்றார்.

அத்துடன், அப்படத்தில் சூர்யாவின் நண்பனாக தோன்றியிருப்பார். எனினும் அக்கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவில்லை.

அதற்கு பிறகு, கார்த்திக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. அப்போது கார்த்தியின் தந்தை அவரை நடிக்க சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதன்போது, சிவகுமார் அவர்கள் “ ஒருவர் எப்போதும் திரைப்படம் இயக்க முடியும்; ஆனால் அவர் வயதான பிறகு அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது “ என்று கூறி சமாதானப்படுத்தினார்.

அதன் பின், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குனர் அமீரின் பட வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் கார்த்தி.

அதன்படி, தமிழ் சினிமாவில் முதன் முதலாக கதாநாயகனாக பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி அறிமுகமானார்.

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு பருத்திவீரன் படமானது 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

வர்த்தக ரீதியாக பாரிய வெற்றியை பெற்ற இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

மேலும், கார்த்தியின் இயல்பான கிராமத்து நடிப்பானது மக்களால் ரசிக்கப்பட்டு அவரது முதல் படத்திலே அவருக்கு நடிகர் என்ற அங்கீகாரம் மக்களால் கொடுக்கப்பட்டதென்றே கூறலாம்.

இப்படம் கார்த்திக்கு பல விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது என்பதை  கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அதன் பின்பு, சிறிய இடைவேளைக்கு பிறகு இயக்குனர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.

ஆயிரத்தில் ஒருவன் நடித்துக்கொண்டிருந்த வேளையில் கார்த்தி லிங்குசாமி அவர்களின் பையா திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.

எனினும், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக பையா படப்பிடிப்பும் சற்று காலம் தள்ளிப்போனது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நடிப்புத் தோற்றத்தை தொடர்ந்து பேண வேண்டும் என்ற தேவையின் காரணத்தால் கார்த்திக்கு மேலும் சில படங்களில் நடிக்க முடியாமல் போனது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி ஆயிரத்தில் ஒருவன் வெளியானது.

இப்படத்திலும் கார்த்தியின் நடிப்பு பெருதும் பாராட்டப்பட்டது.

அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி பையா திரைப்படம் வெளியானது.

வழமையாக, கிராமபுர நடிப்பை வெளிக்காட்டிய கார்த்தி முதல் முறையாக பையா திரைப்படத்தில் நகரபுர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து, கார்த்தியின் நடிப்பில் நான் மகான் அல்ல எனும் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் கார்த்தியின் நடிப்பிற்கு சினிமா விமர்சகர்களிடம் இருந்து நல்ல பாராட்டுகள் கிடைத்தது.

2011 ஆம் ஆண்டு இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் சிறுத்தை திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார்.

அதாவது, போலிஸ் அதிகாரியாகவும் திருடனாகவும் நடித்திருப்பார் கார்த்தி.

இரண்டு கதாப்பாத்திரங்களிலும் முற்றிலும் வேறுபட்ட நடிப்பினை வெளிக்காட்டியிருப்பார்.

அவருக்கு அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்ததோடு 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்களுல் ஒன்றாகவும் சிறுத்தை படம்  திகழ்ந்தது.

அதற்கு பின், K.V ஆனந்த் அவர்கள் இயக்கிய கோ திரைப்படத்தின் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார் நடிகர் கார்த்தி.

2012 ஆம் ஆண்டு கார்த்தியின் நடிப்பில் சகுனி திரைப்படம் மாத்திரம் வெளியானது.

அரசியல் கதை சார்ந்த இப்படம் ஒரு கலவையான விமர்சனங்களை பெற்றதோடு தோல்வியைப் பெற்றதென்றே கூற வேண்டும்.

2013 ஆம் ஆண்டு அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

அவற்றில், பிரியாணி திரைப்படம் மாத்திரமே நேர்மறையான விமர்சனங்களை பெற்றதுடன் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

எனினும், மற்ற 2 படங்களும் சற்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்றன.

அதன் பின்பு, கார்த்தி 2014 ஆம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படத்திலும் 2015 ஆம் ஆண்டு கொம்பன் திரைப்படத்திலும் நடித்தார்.

இத்திரைப்படங்கள் இரண்டும் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றன.

2016 ஆம் ஆண்டு தோழா மற்றும் காஷ்மோரா ஆகிய திரைப்படங்களில் நடித்தார் கார்த்தி.

தோழா திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியானது. இது கார்த்தியின் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு படங்களும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றன.

அத்துடன் நடிப்புக்கு பலரிடமிருந்தும் நல்ல பாராட்டுகளும் வரவேற்பும் கிடத்தன.

அதன் பின், முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு இயக்குனர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் கதாநாயகனாக காற்று வெளியிடை எனும் படத்தில் கார்த்தி நடித்தார்.

படம் பல விருதுகளை பெற்றபோதிலும் பல விமர்சனங்களுக்கு மத்தியில் தோல்வியடைந்தது.

இப்படத்திற்கு இசைப்புயல் A.R ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார்.

A.R ரகுமான் அவர்கள் கார்த்தியின் படங்களுக்கு இசையமைத்த முதல் படமும் இதுவாகும்.

அவ்வாண்டில் மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரியாக தீரன் அதிகாரம் ஒன்று எனும் படத்தில் நடித்திருந்தார்.

ஒரு போலீஸ் உத்தியோகஸ்த்தர் சந்திக்கும் பிரச்சினைகள், ஒரு நேர்மையான கடமையை சரியாக செய்ய நினைக்கும் காவல்துறை அதிகாரி முகம்கொடுக்கும் இன்னல்கள், அவர் எவ்வாறு அப்பிரச்சினைகளில் வெற்றிபெறுகிறார் என சிறப்பாக காட்சிகள் அப்படத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

அப்படத்தில் கார்த்தியின் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்ததென்றே சொல்ல முடியும்.

அப்படம் அபார வெற்றியைப் பெற்றது.

2018 ஆம் ஆண்டு கார்த்தி கடைக்குட்டி சிங்கம் என்ற ஒரு படத்தில் மாத்திரம் நடித்தார்.

கொம்பன் படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து கதைகளத்தில் ஒரு விவசாயியாக தோன்றியிருந்தார்.

இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

தேவ், கைதி, தம்பி ஆகிய படங்கள் கார்த்தியின் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகின.

அவற்றில் தேவ் எனும் திரைப்படம் எதிர்மறையான பேச்சுக்களுக்கு உட்பட்டதோடு வர்த்தக ரீதியாக தொல்வியும் அடைந்தது.

கைதி திரைப்படம் கார்த்தியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றதோடு படம் 100 கோடி இந்திய ரூபாய் வசூல் செய்து சாதனை படத்தது.

தம்பி திரைப்படத்தில் தனது அண்ணியான நடிகை ஜோதிகாவுக்கு தம்பியாக நடித்தார் கார்த்தி.

2021 ஆம் ஆண்டு சுல்தான் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திலும் ஒரு எளிமையான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.

தற்போது சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஏனைய பணிகள்

நடிகர் கார்த்தி 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் இந்தியாவில் பாரதி எயார்டெல் நிறுவனத்தில் பிராண்ட் தூதராக (Brand Ambassador) கைச்சாத்திட்டார்.

அத்துடன், அந்நிறுவனத்தின் “இன்றைக்கு என்ன ப்லேன்” எனும்  விளம்பரப்பிரச்சாரத்திலும் தோன்றினார்.

அதன் பின், நடிகை காஜல் அகர்வாலுடன் இணைந்து ப்ரூ உடனடி கோப்பி (Bru instant Coffee) விளம்பரத்தில் தோன்றினார்.

மேலும், ஓரியோ பிஸ்கட், சந்தூர் சவர்க்காரம் போன்ற தயாரிப்புகளின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நடிகர் சங்க தேர்தலில் பங்கேற்று கார்த்தி அவர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆனார்.

அறப்பணிகள்

நடிகர் கார்த்தி பல தொண்டுகள் புரிந்துள்ளதோடு சமூக சேவை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அவர் தனது ரசிகர்கள் நலன்புரி செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக அவரது 31 வது பிறந்ததினத்தில் மக்கள் நல மன்றம்  எனும் மன்றத்தை ஆரம்பித்து வைத்தார்.

அன்றைய தினத்தில் கார்த்தி அவர்கள் இரத்த தானம் செய்தார்.

அத்துடன், உடல் ஊனமுற்றவர்களுக்கு சைக்கில்களும் பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் சிறுவர்களுக்கு பாடசாலை பைகளையும் வழங்கினார்.

அதுமட்டுமன்றி, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வை.ஆர்.ஜி கெயார் செண்டர் (YRG Care Centre) இற்கு 50,000 இந்திய ரூபாய் பெறுமதியான காசோலையை வழங்கினார்.

வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு வெள்ளை நிற புலியை தத்தெடுத்த கார்த்தி அதன் பராமரிப்பு செலவுக்காக 72,000 இந்திய ரூபாயை அன்பளிப்பு செய்தார்.

இல்லற வாழ்க்கை

நடிகர் கார்த்தி 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி ரஞ்சனி சின்னஸ்வாமி எனும் பெண்ணை திருமணம் செய்தார்.

ரஞ்சனி அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் (Stella Maris College) ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

அத்துடன், அவர் ஈரோடு மாவட்டத்தில் கௌண்டம்பாலயம் எனும் ஊரைச் சேர்ந்தவர் ஆவார்.

இத்தம்பதியினருக்கு உமையாள் எனும் ஒரு மகளும் கந்தன் எனும் ஒரு மகனும் உள்ளனர்.

விருதுகள்   

விருதுகள்

எண்ணிக்கை

தென்னிந்திய ஃபில்ஃபெயார் விருதுகள்

(Filmfare Awards South)

3

தமிழ்நாடு மாநில திரைப்பட விருது

1

விஜய் விருது

1

சைமா விருது

(SIIMA Awards)

1

எடிசன் விருது

(Edison Award)

1

நோர்வே தமிழ் திரைப்பட விழா விருது

(Norway Tamil Film Festival Award)

1

 

நடிகர் கார்த்தி அவர்கள் மொத்தமாக 6 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு 8 விருதுகளையும் பெற்றுள்ளார்.

எவ்வாறான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்ககூடிய கார்த்திக்கு இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

கதாபாத்திரத்திற்கான இயல்பான அவரின் நடிப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது.

கார்த்தி அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறோம்.

இக்கட்டுரையை அனைவருக்கும் பகிரவும்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *