நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்தவர் என கூறலாம்.
இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர், பின்னணி பாடகர், கொடையாளியாவார்.
ஜோசப் விஜய் சந்திரசேகர் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் சுருக்கமாக விஜய் என அழைக்கப்படுகிறார்.
மேலும் ரசிகர்கள் இவரை தளபதி என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவிலேயே ஒரு முக்கியமான நடகராக திகழ்கிறார்.
பிறப்பு
நடிகர் விஜய் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி சென்னையில் பிறந்தார்.
திரைப்பட இயக்குநரான S.A சந்திரசேகர் இவரின் தந்தை ஆவார். விஜயின் தாயாரின் பெயர் சோபா ஆகும். அவர் ஒரு பின்னணி பாடகர் ஆவார்.
நடிகர் விஜய்க்கு வித்யா என ஒரு தங்கை இருந்தார். 2 வயதாக இருந்தபோது விஜயின் தங்கை இறந்துவிட்டார். தனது தங்கையின் இறப்பு விஜய் அவர்களை பெரிதும் பாதித்தது.
சிறு வயதில் மிகவும் குறும்புத்தனமாக, சுறுசுறுப்பாக, அதிகம் பேசக்கூடியவராக இருந்த விஜய் தனது தங்கையின் மறைவிற்கு பிறகு மிக அமைதியானவராக மாறிவிட்டார்.
சகோதரி பற்றிய தலைப்பில் எதாவது பேசினால் விஜய் உடனே அழுதுவிடுவார் என அவரின் ஆசிரியர்கள் அவரது பெற்றோருக்கு கூறியுள்ளார்கள்.
தனது தங்கையின் நினைவாக தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு V.V Productions அதாவது Vidhya-Vijay Productions என பெயர் வைத்துள்ளார்.
விஜய் அவர்கள் தனது தங்கையின் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்துள்ளார் என்பதற்கு இவ்விடயங்கள் சான்றுகளாகும்.
நடிகர் விஜய் தனது ஆரம்ப கல்வியை கோடம்பாக்கத்திலுள்ள ஃபாத்திமா மெட்ரிக்யூலேஷன் இரண்டாம் மேல்நிலைப்பள்ளியில் (Fathima Matriculation Higher Secondary School) கற்றார்.
அதற்கு பின்பு விருகம்பாக்கத்திலுள்ள பாலலொக் மெட்ரிக்யூலேஷன் இரண்டாம் மேல்நிலைப்பள்ளியில் (Balalok Matriculation Higher Secondary School) தன் படிப்பை தொடர்ந்தார்.
லொயலா கல்லூரியில் காட்சி தொடர்பாடலில் (Visual Communications) பட்டப்படிப்பை மேற்கொண்ட நடிகர் விஜய் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக தன் படிப்பை கைவிட்டார்.
சினிமா வாழ்க்கையின் ஆரம்பம்
நடிகர் விஜய் தனது 10 வது வயதில் அதாவது 1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தனது தந்தையின் இயக்கத்திலும் நடிகர் விஜயகாந்தின் நடிப்பிலும் உருவான வெற்றி எனும் திரைப்படத்தில் முதன் முறையாக குழந்தை நட்சத்திரமாக தோன்றினார் நடிகர் விஜய்.
மேலும் தனது தந்தையான S.A சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் உருவான குடும்பம் (1984 ஆம் ஆண்டு), நான் சிகப்பு மனிதன் (1985 ஆம் ஆண்டு), வசந்த ராகம் (1986 ஆம் ஆண்டு), சட்டம் ஒரு விளையாட்டு (1987 ஆம் ஆண்டு), இது எங்கள் நீதி (1988 ஆம் ஆண்டு) போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அவர்கள் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு எனும் திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக தோன்றினார்.
அப்போது விஜயின் வயது 18 ஆக இருந்தது.
பிறகு 1993 ஆம் ஆண்டு திரைக்கு வந்த செந்தூரபாண்டி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ஒரு குறிப்பிட்ட அளவு வசூலை பெற்றுக்கொடுத்தது.
1994 ஆம் ஆண்டு சங்கவியுடன் இணைந்து ரசிகன் எனும திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமே விஜயின் முதலாவது வெற்றிப் படமாக கருதப்படுகிறது.
மேலும் முக்கியமான விடயம் என்னவென்றால் விஜய்க்கு இளைய தளபதி எனும் சிறப்பு பெயர் வழங்கப்பட்டு வெளியான முதல் படம் இதுதான். அத்துடன் அவர் “பொம்பை சிட்டி சுக்கா ரொட்டி” எனும் பாடலை பாடி முதன் முறையாக ஒரு பாடகராக அறிமுகமானதும் இப்படத்தில் தான்.
இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.
1995 ஆம் ஆண்டு தேவா, ராஜாவின் பார்வையிலேயே, விஷ்ணு, சந்திரலேகா போன்ற படங்களில் விஜய் நடித்தார்.
இவற்றில் ராஜாவின் பார்வைலேயே எனும் திரைப்படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து நடித்தார். நடிகர் விஜயும் நடிகர் அஜிதும் இணைந்து நடித்த ஒரே ஒரு படம் இதுதான்.
1996 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாப்பிள்ளை எனும் படத்தில் நடித்தார்.
அதை தொடந்து இயக்குநர் விக்ரமண் இயக்கிய பூவே உனக்காக எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒரு சினிமா நட்சத்திரமாக இனங்கானப்பட்டு அவரின் நடிப்பு முதன் முறையாக பாராட்டப்பட்டது.
மேலும், அதே ஆண்டு வசந்தவாசல், மாண்புமிகு மாணவன், செல்வா போன்ற படங்களில் நடித்தார்.
1997 ஆம் ஆண்டு காலமெல்லாம் காத்திருப்பேன், ல்வ் டுடே (Love Today), வன்ஸ் மோர் (Once More), நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடித்தார்.
வன்ஸ் மோர் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்களுடன் இணைந்து விஜய் நடித்திருந்தார். இப்படம் மாரும் வெற்றியை பெற்றது.
நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார் நடிகர் விஜய். இது நடிகர் சூர்யா அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை இயக்குநர் வசந்த அவர்கள் இயக்கியதோடு இயக்குநர் மனிரத்ணம் அவர்கள் தயாரித்திருந்தார்கள்.
இவற்றில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் வெற்றியின் மூலம் விஜய் அவர்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
1998 ஆம் ஆண்டு நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், நிலாவே வா ஆகிய 3 படங்களில் நடித்தார்.
1999 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் 4 படங்கள் வெளிவந்தன. துள்ளாத மனமும் துள்ளும், என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா போன்ற படங்களே அவை ஆகும்.
இப்படங்களில் எழில் அவர்கள் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் நடிகை சிம்ரனுடன் ஜோடி சேர்ந்து விஜய் நடித்திருந்தார்.
இப்படம் தமிழ் நாட்டில் 200 நாட்களுக்கும் அதிகமாக காட்சியாகி ப்லொக்பஸ்டார் (Blockbuster) படமாகி நல்ல வசூலையும் விஜய்க்கு புகழையும் பெற்றுக் கொடுத்தது.
2000 ஆம் ஆண்டில் கண்ணுக்குள் நிலவு, குஷி, ப்ரியமானவளே போன்ற திரைப்படங்கள் விஜயின் நடிப்பில் வெளிவந்தன.
2001 ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் சூர்யா அவர்களுடன் ப்ரெண்ட்ஸ் (Friends) திரைப்படத்தில் இணைந்தார் விஜய்.
இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்களின் நடிப்பில் உருவான நகைச்சுவை காட்சிகள் இப்படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் சேர்த்தன.
அத்துடன், அக்காட்சிகள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவராலும் இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
மேலும், அவ்வாண்டில் பத்ரி, சாஜஹான் போன்ற 2 படங்களிலும் நடித்திருந்தார் விஜய்.
அதன் பின் 2002 ஆம் ஆண்டு தமிழன், யூத் (Youth), பகவதி போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.
தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அவர் தன் சினிமா வாழ்வில் அறிமுகமான திரைப்படம் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டை பொருத்தவரையில் வசீகரா, புதிய கீதை, திருமலை போன்ற படங்களில் நடித்தார்.
வழமையான நடிப்பில் இருந்து விலகி தனது வித்தியாசமான ஒரு நடிப்பை திருமலை திரைப்படத்தில் வெளிக்காட்டியிருந்தார் விஜய்.
இப்படத்தின் மூலம் தன்னை ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக அனைவரின் மனதிலும் நிலைநிருத்தினார்.
விஜய்க்கு திருமலை திரைப்படம் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது.
அதற்கு பிறகு விஜயின் உதயா திரைப்படம் வெளியானது. 1998 ஆம் ஆண்டு இதன் தயாரிப்பு பணிகள் ஆரம்பமான போதும் 2004 ஆம் ஆண்டு தான் இப்படம் திரைக்கு வந்தது.
நடிகர் விஜயும் இசைப்புயல் A.R ரகுமான் அவர்களும் இணைந்து பணியாற்றிய முதல் படமும் உதயா என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.
இயக்குநர் S. தரணியின் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டே கில்லி திரைப்படமும் வெளிவந்தது. விஜயின் கில்லி திரைப்படமும் தமிழ்நாடு திரையரங்குகளில் காட்சியாகி 200 நாட்களை பூர்த்தி செய்தது.
இந்தியாவிற்குள் 500 மில்லியன் இந்திய ரூபாயை வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை கில்லி படைத்தது.
அதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படையப்பா திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் 30 கோடி இந்திய ரூபாயை வசூலித்து அதிக வசூல் செய்த படமாக கருதப்பட்டது.
கில்லி தமிழில் மட்டுமன்றி அந்நேரத்தில் கேரளாவில் அதிக வசூலை பெற்ற மலையாளம் அல்லாத படமாக சாதனை படைத்தது.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் படம் அல்லாத, மலேசியன் சந்தையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.
இப்படத்தை தொடர்ந்து மதுர திரைப்படம் வெளியாகி இருந்தது.
2005 ஆம் ஆண்டு விஜயின் நடிப்பில் திருப்பாச்சி, சுக்ரன், சச்சின், சிவகாசி போன்ற படங்கள் வெளியாகி இருந்தன. சுக்ரனில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.
2006 ஆம் ஆண்டு ஆதி என்ற படத்தில் மாத்திரமே நடித்தார் விஜய்.
2007 ஆம் ஆண்டு போக்கிரி, அழகிய தமிழ் மகன் ஆகிய இரு படங்களில் நடித்தார்.
நடிகர் பிரபுதேவா இயக்கிய போக்கிரி படமானது 2007 ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த 3 வது திரைப்படமாக இருந்தது.
அத்துடன் கேரளாவில் இதுவரை 100 நாட்கள் தியேட்டர்களில் காட்சியான தமிழ் திரைப்படமும் போக்கிரி தான் என்பது கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.
விஜய் இரட்டை வேடங்களில் முதல் முறையாக தோன்றிய படம் அழகிய தமிழ் மகன் திரைப்படமாகும். எனினும் இது ஓரளவு வசூலை தான் பெற்றது.
2008 ஆம் ஆண்டு குருவி, பந்தயம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பந்தயம் எனும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார் விஜய்.
மீண்டும் பிரபுதேவா அவர்களுடன் 2009 ஆம் ஆண்டு வில்லு திரைப்படத்தில் கைக்கோர்த்தார். அதன் பிறகு விஜய் நடிப்பில் வேட்டைக்காரன் திரைப்படம் வெளிவந்தது.
வேட்டைக்காரன் 2009 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மாறியது.
2010 ஆம் ஆண்டு சுறா எனும் திரைப்படத்தில் மாத்திரம் விஜய் நடித்தார். இது விஜய் அவர்களின் 50 வது திரைப்படமாகும்.
அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு காவலன், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்தார்.
காவலன் திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) காட்சிபடுத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் அவர்களுடன் முதன் முறையாக நண்பன் திரைப்படத்தில் பணியாற்றினார் விஜய்.
நண்பன் திரைப்படம் 100 நாட்கள் கடந்து காட்சியாகி வசூல் ரீதியில் பாரிய வெற்றியை பெற்றது. அத்துடன் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவிலும் (Melbourne International Film Festival) காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் பின் அவ்வருடமே ரவுடி ரதோர் (Rowdy Rathore ) எனும் ஹிந்தி பட பாடலில் சிறப்புத்தோற்றத்தில் தோன்றினார் விஜய்.
அதற்கு பிறகு இயக்குநர் A.R முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகிய துப்பாக்கி எனும் திரைப்படத்தில் நடித்தார். இது இவர்கள் இருவரும் முதல் முறையாக பணியாற்றிய படமாகும்.
துப்பாக்கி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதுடன் தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக 100 கோடி இந்திய ரூபாயை வசூலித்த 3 வது படமாக திகழ்ந்தது.
அத்துடன் 180 கோடி இந்திய ரூபாயை வசூல் செய்த விஜயின் முதல் படம் ஆகும்.
2013 ஆம் ஆண்டு தலைவா எனும் திரைப்படத்தில் மட்டுமே நடித்த விஜய் 2014 ஆம் ஆண்டு ஜில்லா, கத்தி போன்ற வெற்றிப் படங்களை தன் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அளித்தார்.
கத்தி திரைப்படத்தில் விஜயுடன் முதல் முறையாக இளம் இசையமைப்பாளர் அனிருத் இணைந்தார். அத்துடன் அனைத்து பாடல்களும் பாரிய வெற்றியைப் பெற்றன.
2015 ஆம் ஆண்டு புலி எனும் படத்திலும் 2016 ஆம் ஆண்டு தெறி எனும் படத்திலும் நடித்தார்.
தெறி படம் முதல் முறையாக அட்லீ, விஜய் கூட்டணியில் உருவானது.
2017 ஆம் ஆண்டு 2 படங்களில் நடித்தார். அதாவது பைரவா, மெர்சல் ஆகிய 2 படங்களில் நடித்திருந்தார்.
இயக்குநர் அட்லீயுடன் இரண்டாவது முறையாக மெர்சலில் இணைந்த விஜய் அப்படத்திற்காக மெஜிசியன்களிடம் (Magicians) சில மெஜிக் (Magic) நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.
இப்படத்தில் விஜய் முதன் முறையாக 3 கதாபாத்திரங்களில் நடித்தார்.
இப்படம் விஜயின் சினிமா வாழ்வில் 2.5 பில்லியன் வசூலை பெற்ற முதல் திரைப்படமானதுடன் ஜப்பான் நாட்டின் சில முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது.
இது சீனாவில் வெளியாகிய விஜயின் 2 வது திரைப்படமாகும்.
அத்துடன் தென் கொரியாவில் புச்சியோன் இண்டர்நேஷனல் ஃபெண்டாஸ்டிக் ஃபிலிம் ஃபெஸ்டிவலிலும் (Bucheon International Fantastic Film Festival) இப்படம் திரையிடப்பட்டது.
2018 ஆம் ஆண்டு வெளியான சர்கார் திரைப்படத்தில் 3 வது முறையாக A.R முருகதாஸ் அவர்களுடன் இணைந்தார் விஜய். இப்படம் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகியிருந்தபோதிலும் 2 நாட்களிலேயே 100 கோடி இந்திய ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.
2019 ஆம் ஆண்டு மீண்டும் 3 வது முறையாக அட்லீயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் பணியாற்றினார் விஜய்.
வர்த்தக ரீதியாக இமாலய வெற்றியை பெற்றதுடன் விஜயின் பட வரிசையின் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தற்போது லொகேஷ் கணகராஜ் இய்க்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏனைய பணிகள்
தயாரிப்பாளர்
நடிகர் விஜய் 1991 ஆம் ஆண்டு நண்பர்கள் எனும் திரைப்படத்தையும் 1992 ஆம் ஆண்டு இன்னிசை மழை எனும் திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.
குறுந்திரைப்படம்
2008 ஆம் ஆண்டு ஹீரோவா? ஜீரோவா? (Herova? Zerova?) எனும் குறுந்திரைப்படத்தில் நடித்தார்.
மேலும், இக்குறுந்திரைப்படத்தில் சூர்யா, மாதவன், ஜோதிகா ஆகிய நடிகர்களும் நடித்துள்ளார்கள்.
விளம்பரங்களில் நடித்தல் மற்றும் பிராண்ட் தூதர் (Brand Ambassador) ஆகுதல்
2002 ஆம் ஆண்டு இந்தியாவின் கோகா கோலா (Coca Cola India) விளம்பரத்தில் நடித்தார்.
2005 ஆம் ஆண்டில் சன்ஃபீஸ்ட் (Sunfeast) விளம்பரத்தில் நடித்தார்.
2008 ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (Indian Premier League) இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் தூதராக கைச்சாத்திட்டார்.
இதன்போது, மஹேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) அவர்கள் அணித்தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு இந்தியாவின் கோகா கோலா நிறுவனத்தின் பிராண்ட் தூதராக கைச்சாத்திட்டதோடு விளம்பரத்திலும் நடித்தார்.
2010 ஆம் ஆண்டில் ஜோஸ் அலுக்காஸின் (Jos Alukkas) பிராண்ட் தூதரானதுடன் விளம்பரத்திலும் தோன்றியிருந்தார்.
அத்துடன் டாடா டொக்கோமோ (Tata Docomo) விளம்பரத்திலும் நடித்திருக்கிறார் விஜய்.
அறப்பணி
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி தனது பிறந்தநாளை முன்னிட்டு எக்மோர் அரசாங்க தேசிய வைத்தியசாலையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.
2008 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பலமுறை உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருந்தார்.
மேலும், விஜய் அவர்கள் பல உண்ணாவிரத போரட்டங்களில் பங்கேற்றுள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
நடிகர் விஜய் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொண்டு பணிகளை மேற்கொள்வதற்காக விஜய் மக்கள் இயக்கம் எனும் சமூக நல அமைப்பை நிறுவினார்.
கம்மியம்பேட்டையில் “தானே” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜயின் மக்கள் மன்ற நிர்வாகிகளால் நிவாரண முகாம் ஒழுக்கமைக்கப்பட்டதோடு நடிகர் விஜய் அவர்களால் அரிசியும் வழங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பரீட்சையில் முதல்நிலை பெற்ற மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விருதுகள் விழாவில் இளைய தளபதி விஜய் கல்வி விருதுகள் வழங்கி கௌரவிக்கபட்டார்கள்.
இவ்விழா சென்னை ஜே.எஸ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
2014 ஆம் ஆண்டு தேநீர் கடை உரிமையாளரின் மகளிற்கு கோடம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் நுழைவு கிடைப்பதற்கு நடிகர் விஜய் உதவி புரிந்தார்.
21 ஜனவரி 2017 இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு விஜய் குரல் கொடுத்து ஒத்துழைப்பு வழங்கினார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நிதி உதவி வழங்கினார்.
ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு (The Sterlite Copper Plant) எதிரான போராட்டத்தில் காவல்துறை நடித்திய துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 7 ஜூன் 2018 இல் விஜய் நிதி உதவி வழங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் தனது ரசிகர் மன்ற தலைவர்களின் துணையுடன் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி அன்று 70 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தமிழ் நாட்டில் “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தனது ஒவ்வொரு விஜய் மக்கள் இயக்க தலைமை அதிகாரிகளின் வங்கிக்கணக்குகளுக்கும் தலா 4.5 இலட்சம் இந்திய ரூபாயை நவம்பர் 2018 இல் வைப்புச் செய்தார்.
2020 இல் கொரோனா பரவலின் போது 1.3 கோடி இந்திய ரூவாயை பல்வேறு நிவாரண நிதிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
அதற்கு மேலதிகமாக கொரோனா நோயினாலும் முடக்குதலாலும் (Lockdown) பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு விஜய் அவர்கள் நேரடியாக பணத்தை வைப்புச் செய்தார்.
இல்லற வாழ்க்கை
25 ஆகஸ்ட் 1999 இல் சங்கீதா சொர்ணலிங்கம் எனும் பெண்ணை ஐக்கிய இராச்சியத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். சங்கீதா விஜயின் ரசிகையாவார்.
தன் ரசிகையையே நடிகர் விஜய் திருமணம் செய்துகொண்டார். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தம்பதியினருக்கு ஜாசன் சஞ்ஜெய் என ஒரு மகனும் திவ்யா ஷாஷா என ஒரு மகளும் உண்டு.
சஞ்ஜெய் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தின் ஒரு பாடலில் தோன்றினார். அதேபோல், ஷாஷா 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தெறி படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார்.
நடிகர் விஜய் பெற்ற விருதுகளின் விபரங்கள்
விருதுகள் |
எண்ணிக்கை |
கௌரவ விருதுகள் |
2 |
தேசிய விருது ஐக்கிய இராச்சியம் (UK) |
1 |
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் |
2 |
விஜய் விருதுகள் |
9 |
தென் இந்திய சர்வதேச திரைப்பட விருது |
1 |
எடிசன் விருதுகள் |
4 |
சைமா விருது (SIIMA Award) |
1 |
பிஹைன்வுட்ஸ் தங்க பதக்கங்கள் (Behindwoods Gold Medals) |
5 |
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் |
2 |
ஆசியாநெட் திரைப்பட விருது (Asianet Film Award) |
1 |
டெகோஃபெஸ் விருதுகள் (Techofes Awards) |
2 |
கொஸ்மோபொலிடன் விருது (Cosmopolitan Award) |
1 |
சென்னை கலக விருது (Madras Club Award) |
1 |
தென்னிந்திய பிலிம்ஃபெயார் விருதுகள் (Filmfare Awards South) |
4 |
ஜீ சினி விருதுகள் தமிழ் (Zee Cine Awards Tamil) |
1 |
தினகரன் விருது |
1 |
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருதையும் 2007 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜீ.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Dr. M.G.R Educational and Research Institute) வழங்கிய டாக்டர் பட்டத்தையும் நடிகர் விஜய் அவர்கள் கௌரவ விருதுகளாக பெற்றுள்ளார்.
நடிகர் விஜய் அவர்கள் இதுவரை மொத்தமாக 34 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு 38 விருதுகளையும் பெற்றுள்ளார்.
நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் பெறும் நடிகர்களுல் ஒருவர் ஆவார்.
அந்தவகையில், ஃபோர்ப்ஸ் இந்தியா (Forbes India) சஞ்சிகையின் 100 பிரபலமானவர்கள் பட்டியலில் 7 தடவைகள் விஜய் அவர்கள் இடம்பிடித்துள்ளார்.
100 பிரபலமானவர்கள் பட்டியல் என்பது பிரபலமானவர்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்படும் பட்டியல் ஆகும்.
அத்துடன் நடிகர் விஜய் அவர்கள் அதிகம் தேடப்பட்ட மற்றும் ட்வீட் செய்யப்பட்ட நடிகர் என கூகுல் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பலமுறை பதிவுசெய்துள்ளன.
தென் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடுத்ததாக நடிகர் விஜயின் திரைப்படங்கள் தான் உலகளவில் அதிக வசூலை செய்கின்றன.
ஏனென்றால், நடிகர் விஜய்க்கு இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் அதிகளவான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நடிப்பு, நடனம், பாடல் போன்ற அனைத்து விடயங்கள் மூலமாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
தளபதி விஜய் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் அவரின் எதிர்கால பணிகள் வெற்றியடையவும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
இக்கட்டுரை பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும். குறிப்பாக தளபதி ரசிகர்களுக்கு பகிரவும்.