Smart Tamil Trend

Trending Now

Google Search

Vijay Sethupathi » விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

விஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை

Spread the love

இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களுள் தனது வித்தியாசமான நடிப்பாலும் பேச்சாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. விஜய குருநாத சேதுபதி என்ற பெயர் கொண்ட இவர் விஜய் சேதுபதி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முதல் 5 வருட காலமாக துணை நடிகராகவே நடித்துள்ளார்.

பிறப்பு

விஜய் சேதுபதி 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தமிழ் நாட்டின் ராஜபாளயம் எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் காளிமுத்து. இவர் ஒரு பொறியியலாளர் ஆவார். தாயாரின் பெயர் சரஸ்வதி. விஜய் சேதுபதிக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு.

ஆரம்ப வாழ்க்கை

விஜய் சேதுபதி வடசென்னையின் எண்ணூர் எனும் இடத்தில் வசித்த வந்தார். அவர் எம்ஜிஆர் மேல்நிலைப்பள்ளியிலும் (MGR Higher Secondary School) லிட்டில் ஏன்ஜல்ஸ் மெட்ரிகுலேஷன் எச்ஆர் மேல்நிலைப்பள்ளியிலும் (Little Angels Mat HR Sec School) கல்வி கற்றார். அவர் பாடசாலையில் சராசரியை விட குறைவான நிலையில் தான் காணப்பட்டார். மேலும் அவர் விளையாட்டு மற்றும் பாடதிட்டம் சாராத செயற்பாடுகள் ஆகியவற்றிலும் கூட ஆர்வம் காட்டவில்லை.

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி தன் கைசெலவுக்காக சில்லறை கடையில் விற்பனையாளராகவும் துரித உணவகத்தில் காசாளராகவும் (Cashier) தொலைபேசி கடை இயக்குபவராகவும் (Phone Booth Operator) சிறு சிறு தொழில்களை செய்தார். அப்படியே தனது பட்டப்படிப்பை தன்ராஜ் பெயிட் ஜெயின் கல்லூரியில் (Dhanraj Baid Jain College) முடித்தார். அதாவது அவர் பீகொம் (B.com) பட்டம் பெற்றவர் ஆவார். அவர் தன் படிப்பை முடித்த பிறகு ஒரு மொத்த வியாபார சீமெந்து வணிக நிலையத்தில் உதவி கணக்காளராக பணிபுரிந்தார். அந்நேரத்தில் தனது 3 சகோதரர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காகவே அவர் துபாய் (Dubai) சென்று கணக்காளராக பணியாற்றினார். இந்தியாவில் பெற்ற சம்பளத்தை விட 4 மடங்கு சம்பளம் கிடைத்ததால் அவர் அங்கு சென்றார். அவர் பணியாற்றிய வேலையில் அதிருப்தி அடைந்ததால் மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். பிறகு சிறிது காலம் நண்பர்களுடன் இணைந்து மனை அலங்கார தொழிலை (Interior Decoration) செய்தார்.

நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பம்

2004 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி கூத்துப்பட்டரையில் கணக்காளராகவும் நடிகராகவும் இணைந்தார். ஆரம்பத்தில் அவர் பிண்ணனி நடிகராக தான் நடித்து வந்தார். 2004 ஆம் ஆண்டு வெளியான M குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி எனும் படத்தில் முதன் முதலில் துணை நடிகராக நடித்தார். அதன் பின்பு 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண் எனும் தொடர் நாடகத்தில் நடித்தார். மேலும் பல குறும்படங்களிலும் நடித்து வந்தார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுடன் இணைந்து நிறைய குறும்படங்களில் பணியாற்றியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனால் இயக்கப்பட்டு வெளிவந்த புதுப்பேட்டை என்னும் படத்தில் தனுஷின் நண்பனாக நடித்தார் விஜய் சேதுபதி. பிறகு 2007 ஆம் ஆண்டு வெளிவந்த லீ எனும் திரைப்படத்தில் கால்பந்து விளையாட்டு வீரராக நடித்திருந்தார். அதற்கு பிறகு இயக்குநர் சுசீந்திரனின் முதல் இரு படங்களான வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக சில காட்சிகளில் நடித்தார்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தார். இப்படத்தை இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் இயக்கியிருந்தார். மேலும் இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு 2011 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட வர்ணம் எனும் படத்தில் நடித்தார். விஜய் சேதுபதி முதன் முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் சுந்தரபாண்டியன் என்னும் படத்தில் நடித்திருந்தார். அப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்று சொல்லலாம். இப்படத்தை அறிமுக இயக்குநரும் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பருமான கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கியிருந்தார். அவ்வாண்டு இப்படம் வர்த்தகரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. அத்தோடு விஜய் சேதுபதியின் நடிப்பு நன்கு வெளிப்படுத்தப்பட்டதோடு மக்கள் அவரை ஒரு சிறந்த நடிகராக ஏற்றுக்கொண்ட படம் என்றும் கூறலாம்.

அதே ஆண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் பெறும் வெற்றியை பெற்றதோடு அப்படத்தில் வரும் “என்னாச்சி” எனும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதியை மிகவும் கவரவைத்தது. 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் மற்றும் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவையும் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.

2014 ஆம் ஆண்டு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், வண்மம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் திருடன் போலீஸ் ஆகிய திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பார்.

2015 ஆம் ஆண்டு பென்ச் டோகிஸ் – த ஃபஸ்ட் பென்ச் (Bench Talkies – The First Bench), புறம் போக்கு என்கிற பொது உடமை, ஆரெஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்களில் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பு திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. இவற்றில் ஆரெஞ்சு மிட்டாய் படத்தில் தயாரிப்பாளராக தனது அடுத்த வளர்ச்சி படியில் கால் பதித்தார். மேலும் அப்படத்தின் வசன எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது கலை திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 6 திரைப்படங்கள் நடித்திருந்தார். அவை சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை மற்றும் ரெக்க ஆகிய படங்களாகும். இவர் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக சினிமாவில் தோன்றிய படம் சேதுபதியாகும். மேலும் இப்படத்தில் கடமை தவராத போலீஸ் அதிகாரி எவ்வாறு இருக்க வேண்டும், தனது குடும்பத்தில் எவ்வாறு பொறுப்பான தந்தையாக ஒரு போலீஸ் அதிகாரி செயற்பட வேண்டும் என்பதை தன் நடிப்பால் வெளிக்காட்டியிருப்பார். இந்த 6 படங்களிலும் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பார். அதுதான் இவர் சீக்கிரமாக தமிழ் சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்கான காரணமாக கூட இருக்கலாம்.

2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன் ஆகிய வெற்றிப்படங்கள் வெளிவந்தன. மேலும் சிறப்பு தோற்றத்தில் கதாநாயகன் எனும் திரைப்படத்திலும் அதே ஆண்டு நடித்திருந்தார். அதற்கு பிறகு 2018 ஆம் ஆண்டு ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ட்ராஃபிக் ராமசாமி, ஜுங்கா, இமைக்காத நொடிகள், செக்க சிவந்த வானம், 96 மற்றும் சீதாகாதி ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். இப்படங்களில் ட்ராஃபிக் ராமசாமி மற்றும் இமைக்காத நொடிகள் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இவ்வருடம் பேட்ட, சூப்பர் டெலுக்ஸ் மற்றும் சிந்துபாத் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் இறுதியாக நடித்த சிந்துபாத் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கலை துறையில் ஏனைய பணிகள்

படம்

பணி

ஆரெஞ்சு மிட்டாய் தயாரிப்பாளர், வசன எழுத்தாளர், பாடலாசிரியர், பிண்ணனி பாடகர்
ஹலோ நான் பேய் பேசுறேன் பிண்ணனி பாடகர்
கட்டப்பாவ காணோம் கதை கூறுபவர்
இப்படை வெல்லும் கதை கூறுபவர்
ஜுங்கா தயாரிப்பாளர்
மேற்குத்தொடர்ச்சிமலை தயாரிப்பாளர்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பிண்ணனி பாடகர்
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டப்பிங் கலைஞர்

 

இல்லற வாழ்க்கை

விஜய் சேதுபதி துபாய் சென்று 2 வருடகாலம் பணியாற்றினார். இக்காலத்தில் இணையத்தில் ஜெசி என்னும் பெண்ணை சந்தித்தார். அப்பெண் கேரளாவில் கொல்லம் எனும் ஊரைச்சேர்ந்தவர் ஆவார். இருவர்களுக்குமிடையில் காதல் ஏற்பட்டு மீண்டும் இந்தியா வந்ததற்கு பிறகு அப்பெண்ணை மணந்தார். இவர்களது திருமணம் 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இத்தம்பதிக்கு சூர்யா என ஒரு மகனும் ஸ்ரீஜா என ஒரு மகளும் உண்டு. இச்சூர்யா 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடிதான் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி பெற்ற விருதுகள்

விருது

எண்ணிக்கை

தமிழ்நாடு மாநில திரைப்பட விருது

1

நோர்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்

2

தென்னிந்திய ஃபிலிம்ஃபெயார் விருது

1

விஜய் விருதுகள்

3

சிமா விருது

1

எடிசன் விருது

1

ஏசியா விஷன் விருது

1

ஏனைய விருதுகள்

3

 

விஜய் சேதுபதி மொத்தமாக 21 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 13 விருதுகளை பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதி சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் அதிக சோதனைகளை சந்தித்திருந்தாலும், அவர் சிறந்த நடிகர் என மக்கள் இனங்கண்டதற்கு பிறகு குறுகிய காலத்தில் வளர்ந்த ஒரு நடிகர் ஆவார். அதற்கு காரணம் பெரியவர் சிறியவர், ஏழை பணக்காரன் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருடனும் ஒரே மாதிரி பழகுவதாலாகும். அதனால் தான் அவர் “மக்கள் செல்வன்” என சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். அத்துடன் மிகவும் எளிமையான ஒரு நடிகரும் ஆவார். விஜய் சேதுபதியின் எதிர்கால பணிகள் வெற்றி பெற எமது மணமார்ந்த வாழ்த்துக்கள்.

இக்கட்டுரை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *