இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முண்ணனி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வகையில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மனதை வென்று தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக வளர்ந்துள்ளார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த ஒரு கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் “அல்டிமேட் ஸ்டார் (Ultimate Star)” என சிறப்பு பெயர் கொண்ட இவர் தனது ரசிகர்களால் “தல” என்று அழைக்கப்பட்டார்.
எனினும், அஜித் குமார் அவர்கள் தன்னை தல என்று அழைக்காமல் AK அல்லது அஜித் குமார் என்றே அழைக்கச் சொல்லிவிட்டார்.
இனி, அஜித் குமார் அவர்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.
அஜித் குமாரின் ஆரம்ப வாழ்க்கை (Earlier life of Ajith Kumar)
அஜித் குமார் அவர்கள் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத் எனும் இடத்தில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் P.சுப்ரமணியம். தாயாரின் பெயர் மோகினி.
குடும்பத்தில் நடுப்பிள்ளையான அஜித் குமாரிற்கு அனூப்குமார் என ஒரு அண்ணனும் அணில் குமார் என ஒரு தம்பியும் உண்டு.
நடிகர் அஜித் அசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பாடசாலையில் (Asan Memorial Senior Secondary School) கல்வி கற்றார். 1986 ஆம் ஆண்டு தான் 10 ஆம் தர கல்வியில் சித்தியடையாததால் தனது உயர்நிலை கல்வியை கைவிட்டார்.
பிறகு பகுதி நேர மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மெக்கானிக்காக (Mechanic) பணிபுரிந்ததோடு, முழுநேர ஆடை ஏற்றுமதியாளராக தனது தொழிலை ஆரம்பித்தார்.
இவ்வாறு 1990 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அச்சமயத்தில் அவருக்கு அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு மாடலிங்கில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்தது.
தனது ஆடை ஏற்றுமதி வியாபாரம் தோல்வியடைந்ததால் தனது முழு கவனத்தையும் மாடலிங்கில் செலுத்தினார்.
அஜித் குமாரின் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பம் (The beginning of Ajith Kumar’s acting career)
அஜித் அவர்கள் 1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் பாடசாலை மாணவனாக நடித்திருப்பார்.
அதுவே, தமிழ் சினிமாவில் அஜித் நடித்த முதல் காட்சியாகும். தனது 20 வது வயதில் அஜித் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தெரிவுசெய்யப்பட்டார். துரதிஷ்டவசமாக, அத்திரைப்படத்தின் இயக்குனர் இறந்ததன் காரணமாக படம் தடுத்து நிறுத்தப்பட்டது.
பிறகு 1992 ஆம் ஆண்டு முதன்முதலாக கதாநாயகனாக பிரேம புத்தகம் எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதுவே, அவர் முதலும் கடைசியுமாக நடித்த தெலுங்கு திரைப்படமாகும்.
அஜித் அவர்கள் தமிழில் நடித்த முதல் படம் அமராவதி ஆகும். மேலும், இத்திரைப்படத்தில் அஜித்திற்கு நடிகர் விக்ரம் அவர்கள் குரல் கொடுத்திருப்பார்.
இப்படம் வெளியானதற்கு பிறகு மோட்டார் பந்தய பயிற்சியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக முதுகில் மூன்று முக்கிய சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அதன் விளைவாக ஒன்றரை வருடத்திற்கு படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
1993 ஆம் ஆண்டு நடிகர் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான பாசமலர்கள் எனும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இயக்குநர் K.சுபாஷ் இயக்கத்தில் வெளியான பவித்ரா எனும் படத்தில் முண்ணனி துணைக்கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1995 ஆம் ஆண்டு ஜானகி சௌந்தர் இயக்கிய ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் நடித்தார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், நடிகர் விஜயுடன் இணைந்து நடித்திருப்பதுதான். அஜித், விஜய் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ஒரே ஒரு படம் இதுவாகும்.
அதன்பின்பு இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வசந்த் இயக்கிய ஆசை திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் பாரிய வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக மக்கள் மனதில் தன்னை நிலைநாட்டிக்கொண்டார்.
பிறகு வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்தார். 1996 ஆம் ஆண்டு இயக்குநர் அகத்தியனின் இயக்கத்தில் காதல் கோட்டை எனும் படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை தேவயாணி நடித்திருப்பார்.
இப்படத்தில் சிறந்த ஒரு நடிப்பை வெளிகாட்டி இருப்பார் அஜித் அவர்கள். மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பதற்கு இப்படம் பாரிய பங்கு வகித்தது.
அதன்பின்னர் 1997 ஆம் ஆண்டு நேசம், ராசி ஆகிய படங்களில் நடித்தார். எனினும், அவை பெரிதும் பேசப்படவில்லை என்றே கூறவேண்டும்.
பிறகு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் தயாரிப்பில் வெளிவந்த உல்லாசம் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் நடிகர் விக்ரமும் நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலமாக முதன்முதலாக 2 மில்லியன் இந்திய ரூபாவை சம்பளமாக பெற்றார் நடிகர் அஜித் குமார்.
அதே ஆண்டு பகைவன் மற்றும் ரெட்டை ஜாடை வயசு போன்ற படங்களில் நடித்திருந்த போதிலும் அவை ஓரளவான நல்ல விமர்சனங்களையே பெற்றன.
அதனை தொடர்ந்து வந்த படங்களில் காதல் மன்னன் படத்தை பெரும் வெற்றிப்படமாக சொல்லலாம். இது 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது.
மேலும், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்களும் வெற்றிப்படங்களாக பேசப்பட்டன. அத்துடன், உயிரோடு உயிராக எனும் படம் எதிர்பார்த்த அளவு பேசப்படவில்லை.
1999 ஆம் ஆண்டு தொடரும், உன்னைத்தேடி, வாலி, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம் மற்றும் நீ வருவாய் என ஆகிய திரைப்படங்கள் அஜிதின் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படங்களாகும்.
அவற்றில் வாலி திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார். இரண்டு கதாபாத்திரங்களிலும் வேறுபட்ட நடிப்பை வெளிகாட்டி சினிமாவில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்தார்.
2000 ஆம் ஆண்டு அஜித் அவர்கள் முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் உன்னைகொடு என்னை தருவேன் அகிய படங்களில் நடித்திருந்தார். அவற்றில் உன்னைகொடு என்னை தருவேன் படம் அஜித்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்திக்கொடுத்தது.
2001 ஆம் ஆண்டில் தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம் ஆகிய தமிழ் படங்களில் நடித்ததோடு அசோகா என்ற ஹிந்தி படத்திலும் நடித்திருந்தார்.
இவற்றில் தீனா எனும் திரைப்படத்தில் அஜித் அவர்கள் “தல” என்று புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படுவார். அது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அடையாளப்படுத்தப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை “தல” என்று அழைக்கப்படுகிறார்.
அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டில் வந்த படங்களில் ரெட், வில்லன் போன்ற படங்களை வெற்றிப்படங்களாக குறிப்பிட்டு சொல்ல முடியும்.
எனினும், இவை இரண்டுக்கும் இடையில் ராஜா என்ற திரைப்படத்தில் நடித்தார். இது ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றதோடு ஒரு சராசரியான வசூலையும் பெற்றது.
2003 ஆம் ஆண்டு என்னை தாலாட்ட வருவாளா, ஆஞ்சநேயா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதன் பின்பு 2004 இல் ஜனா என்ற திரைப்படம் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் வெளிவந்தது.
மீண்டும் இயக்குநர் சரணுடன் கைகோர்த்த அஜித் அட்டகாசம் எனும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். ஒருவர் தாயின் சொல் வழி நடக்கும் பிள்ளையாகவும் மற்றவர் ரவுடியாகவும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, அஜித் அவர்கள் நடித்திருந்தார்.
அதன் பின்பு வெளிவந்த ஜீ அஜித்திற்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. இயக்குநர் P.வாசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு பரமசிவன் எனும் திரைப்படத்தில் நடித்தார் அஜித். இப்படத்திற்காக 20 கிலோகிராம் எடையை குறைத்தார். மிகவும் மெலிவான பையனாக அக்கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு நடித்த திருப்பதி எனும் படம் சாதாரணமான வெற்றியை பெற்றது. அஜித் அவர்கள் முதன்முதலாக 3 வேடத்தில் நடித்த படம் தான் வரலாறு. இதை K.S ரவிக்குமார் அவர்கள் இயக்கினார். அத்துடன், இசைப்புயல் A.R ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார்.
அப்படத்தில் நடித்த வேடங்களில் முக்கியமாக பரதநாட்டிய கலைஞராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சன குழுவினரால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு பிறகு 2007 ஆம் ஆண்டில் ஆழ்வார் எனும் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து வந்த படங்களில் கிரீடம், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா போன்ற படங்கள் அஜித்தை மீண்டும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள் என்று கூறலாம்.
2012 ஆம் ஆண்டில் அஜிதின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்தன. அவை பில்லா 2, இங்கிலிஷ் விங்கிலிஷ் ஆகும். எனினும், இவை இரண்டும் சொல்லும் அளவுக்கு அஜிதிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.
அதன் பிறகு 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் முறையே ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் போன்ற படங்கள் வெளிவந்தன். இவை அஜித்தை மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வெளிகாட்டிய படங்களாக குறிப்பிட முடியும்.
அதன் பின்பு இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார்.
இவற்றில் வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இவற்றில் விவேகம் சற்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அத்தோடு, அஜித் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், அதற்கு பிறகு வந்த விஸ்வாசம் பொக்ஸ் ஒபிஸ் ஹிட் ஆனதுடன் குடும்பங்களின் பெரும் ஆதரவை பெற்றது.
இவற்றுக்கு பிறகு இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டில் நேர்கொண்ட பார்வை என்னும் திரைப்படமும் 2022 ஆம் ஆண்டு வலிமை என்ற திரைப்படமும் வெளிவந்தன.
இவற்றில் நேர்கொண்ட பார்வை நல்ல விமர்சனங்களை பெற்றதற்கு மத்தியில் வலிமை சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது.
அஜித் குமாரின் ஏனைய பணிகள் (Other works of Ajith Kumar)
1990 ஆம் ஆண்டு நடிகர் அஜித் சர்க்யூட் 9000 (Circuit 9000) எனும் திரைப்பட விநியோக கம்பனியை ஆரம்பித்தார்.
இருந்தபோதிலும், 1998 ஆம் ஆண்டு தான் இந்த வியாபாரத்தை நிறுத்துவதாகவும், எதிர்காலத்தில் திரைப்பட தயாரிப்பு, விநியோகம் அல்லது இயக்கம் போன்றவற்றிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
அஜித் குமார் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நெஸ்கபேயின் (Nescafe) பிராண்ட் தூதராக (Brand Ambassador) கைச்சாத்திட்டார். காலப்போக்கில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றல் போன்றவற்றை தவிர்த்தார்.
ஆளில்லா வான்வழி விமானங்களை (Unmanned Aerial Vehicle) இயக்குவதில் பேரார்வம் கொண்டவர் அஜித் அவர்கள். இவர் விமானங்களை இயக்குவதற்கான அனுமதி பத்திரம் (License) கொண்ட ஒரே ஒரு தமிழ் நடிகர் ஆவார்.
சமீபத்தில் சென்னை தொழிநுட்ப கல்லூரி (Madras Institute of Technology) அஜித்குமாரை சோதனை விமானியாகவும் (Test Pilot) ஆளில்லா விமான முறைமை ஆலோசகராகவும் (UAV System Advisor) நியமித்தது.
அஜித் குமாரின் பந்தய விபரங்கள் (Racing career of Ajith Kumar)
நடிகர் அஜித் குமார் ஒரு சிறந்த பந்தய வீரர் ஆவார். அவர் இந்தியாவில் மும்பை, சென்னை, டில்லி போன்ற இடங்களில் இடம்பெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, சர்வதேச மோட்டார் பந்தயங்களிலும் கலந்துகொண்டுள்ளார். சர்வதேச பந்தயங்களில் கலந்துகொள்ளும் இந்தய வீரர்களில் நடிகர் அஜிதும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இவர் மலேசியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளிலும் பங்குபற்றியிருக்கிறார்.
2002 இல் நடைபெற்ற ஃபோர்மியூலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப் (Formula Maruti Indian Championships) போட்டியில் 4 வது இடத்தை அஜித் பெற்றார்.
இவர் 2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஃபோர்மியூலா பீஎம்டப்ளியூ சாம்பியன்ஷிப் (Formula BMW Championship) மற்றும் 2010 இல் நடைபெற்ற ஃபோர்மியூலா 2 சாம்பியன்ஷிப் (Formula 2 Championship) போன்ற போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.
குறிப்பாக, ஃபோர்மியூலா 2 சாம்பியன்ஷிப் போட்டியில் அர்மான் இப்ராஹிம் மற்றும் பார்த்திவா சுரேஸ்வரன் ஆகிய பிரபல இந்திய வீரர்களுடன் இணைந்து பங்குபற்றினார்.
அஜித் குமாரின் இல்லற வாழ்க்கை (Personal life of Ajith Kumar)
1999 ஆம் ஆண்டு இயக்குநர் சரணின் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தபோது, அப்படத்தின் கதாநாயகியான ஷாலினியுடன் காதலில் விழுந்தார் அஜித்குமார்.
2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி இருவரின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி இத்தம்பதிக்கு முதல் பெண் குழ்ந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு அனொஷ்கா என பெயர் சூட்டினார்கள். இவர்களின் 2 வது குழந்தை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி பிறந்தது. அது ஆண் குழந்தையாகும். பெயர் ஆத்விக் ஆகும்.
பெற்ற விருதுகள்
விருது |
எண்ணிக்கை |
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
(Tamil Nadu State Film Awards) |
03 |
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
(Cinema Express Awards) |
03 |
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்
(Filmfare Awards South) |
03 |
விஜய் விருதுகள் (Vijay Awards) |
04 |
தினகரன் சினிமா விருதுகள்
(Dinakaran Cinema Awards) |
02 |
ஏனைய விருதுகள் (Other Awards) |
03 |
இவர் மொத்தமாக 20 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு 18 விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் 2 கௌரவ விருதுகளும் அடங்குகின்றன.
அதாவது, 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசினால் “கலைமாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன், 2006 ஆம் ஆண்டில் “எம்ஜீஆர் விருது (MGR Award)” வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இவ்வாறு பெருமைகள் பல பெற்ற அஜித் அவர்கள் சினிமாவில் ஹீரோவாக மட்டுமன்றி, நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாக வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
அத்துடன, உலகமெங்கும் இவருக்கென மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது எதிர்கால பணிகள் வெற்றியடைய எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.