Smart Tamil Trend

Trending Now

Google Search

10 types of foods that boost immunity » நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்

Spread the love

தற்போதைய அவசர வாழ்க்கை முறையினாலும், சரியாக ஆரோக்கியத்தை பேணாமல் இருப்பதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சீக்கிரமாக நோய்க்கு உட்படுகிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

இக்காலத்தில் பலவகையான நோய்கள் புதிது புதிதாக பரவிய வண்ணம் உள்ளன. அதற்கு ஒரு சிறந்த தீர்வு என்னவென்றால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மாத்திரமே.

நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தினமும் உட்கொண்டாலே நோய்களின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

அவ்வகையான உணவுகள் பற்றிய விபரங்களை இனி பார்ப்போம்.

1. பழங்கள் 

பழங்களில் பொதுவாக அனைத்து வகையான மருத்துவ குணங்களும் உண்டு. தினமும் நாம் உணவில் பழங்களை சேர்த்து கொண்டால் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் வாசிக்க:

விட்டமின் C ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் விட்டமின்களில் மிக முக்கியமானதொன்றாகும்.

விட்டமின் C அதிகம் உள்ள பழங்களாக நாரத்தை வகை பழங்களை குறிப்பிடலாம். அதாவது தோடம்பழ வகைகள், எலுமிச்சம்பழம் இதுபோன்ற பழங்களில் அதிக விட்டமின் C உள்ளது.

இது நோய்கிருமிகள் உடலை தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் கொய்யா, பப்பாளி, நெல்லி, ஆப்பிள், கிவிபழம் போன்ற பழங்களும் அதிக விட்டமின் C ஐ கொண்டுள்ளது.

அத்துடன் பெர்ரி வகை பழங்களிலும் தர்பூசணியிலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அதிக வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் அதிக ஆண்டியொக்சிடண்ட்கள் (Antioxidants) உள்ளன.

உடலினுள் நோய்கிருமிகள் நுழைவதற்கு எதிராக மாதுளை சாறு போர் புரிகிறது. அதாவது பக்டீரியாக்கள் மற்றும் பல வகையான வைரஸ்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

மாதுளை சாறில் வைரஸை தடுக்கக்கூடிய இரசாயணப் பொருட்கள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் இவ்வகையான பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகச்சிறந்தது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

2. மரக்கறிகள்

நாம் தினமும் உட்கொள்ளும் மரக்கறிகளில் ஒவ்வொரு மரக்கறியிற்கும் ஒவ்வொரு சிறப்புத் தன்மை உண்டு. அந்தவகையில் சிவப்பு குடை மிளகாயில் அதிக அளவான விட்டமின் C உள்ளது.

அத்துடன் இவற்றில் அதிக பீட்டா கரோட்டீன் (Beta Carotene) உள்ளது. பீட்டா கரோட்டீன் விட்டமின் A ஆக மாற்றப்படுகின்றன. இவை கண்கள் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகின்றன.

பலவகையான விட்டமின்களையும் தாதுக்களையும் கொண்ட சத்துக்கள் நிறைந்த ஒரு மரக்கறியாக பூக்கோசை (Broccoli) குறிப்பிடலாம். ஆம், இவற்றில் விட்டமின் A, C, E ஆகிய விட்டமின்களுடன் அதிக நார்சத்துக்களும் உள்ளன.

அத்துடன் பல வகையான ஆண்டியொக்சிடண்ட்களும் உள்ளன. எனவே நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த மரக்கறி என பூக்கோசை குறிப்பிடலாம்.

மேலும் வாசிக்க:

3. கீரை மற்றும் காலாண்

பசளிக்கீரையில் உடலுக்கு தேவையான அனைத்து விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளது.

ஃபோலட் (Folate), விட்டமின் A, விட்டமின் C, விட்டமின் E, நார்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃப்லவொனொயிட்கள் (Flavonoids), கரோடெனொயிட்கள் (Carotenoids) ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவது மட்டுமன்றி கலப்பிரிவிற்கும் (Cell Division) டீஎன்ஏ (DNA) யில் ஏற்படும் கோளாறுகளை சீரமைக்கவும் துணைபுரிகின்றன.

காலாண்களில் செலேனியமும் (Selenium), ரிபோஃப்லேவின் (Riboflavin), நையாசின் (Niacin) எனப்படும் B விட்டமின்களும் உள்ளன.

உடலில் சரியான அளவு செலேனியம் இல்லாவிட்டால் பல்வேறு சளிக்காய்ச்சல்களுக்கு சீக்கிரம் உட்பட்டுவிடுவோம்.

மேலும் ர்போஃப்லேவின், நையாசின் ஆகியன அதிக நோய்எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன.

4. கிழங்கு

சக்கரை வள்ளிக்கிழங்கில் (Sweet Potato) விட்டமின் A, விட்டமின் C ஆகியன உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

மேலும் இக்கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டீன் ஆனது தோலில் ஏற்படும் பாதிப்பை சரி செய்து பாதுகாப்பு அளிக்கிறது. சக்கரை வள்ளிக்கிழங்கு கொழுப்பற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. சுவையூட்டிகள்

இஞ்சி ஒரு சிறந்த அழற்சி நீக்கியாக தொழிற்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அருமையான மருந்து என்றாலே அது இஞ்சிதான்.

இஞ்சியில் நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயற்படக்கூடிய பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவை நோய்க்கிருமிகள் உடலை தாக்குவதை தடுப்பதுடன் செரிமானத்தையும் மேம்படுத்துகினறன.

இதனால் குடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதன்விளைவாக நோய் எதிர்ப்பு அமைப்பு பலம்பெறும்.

வெள்ளைப்பூண்டை உட்கொள்வது என்பது தடிமன் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் ஒரு எளிமையான தீர்வு ஆகும்.

பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) எனும் இரசாயணப்பொருள் தடிமன் ஏற்படுவதை குறைக்கிறது. தடிமன் ஏற்பட்டிருக்கும் போது பூண்டை உட்கொண்டால் சீக்கிரமாக தடிமன் குறைவதை அவதானிக்க முடியும்.

அல்லிசின் தடிமன் வருவதை தடுப்பது மட்டுமன்றி அல்சீமர்ஸ் நோய் (Alzheimer’s Disease), இதய நோய், புற்றுநோய் இன்னும் பல நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றது.

பக்டீரியா, வைரஸ், பங்கஸ் போன்றவற்றை எதிர்க்கக்கூடிய இரசாயணங்கள் பூண்டில் உள்ளன.

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கொலஸ்ட்ரோலை (Cholesterol) குறைக்கும் ஆற்றலும் கொண்டது.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

மஞ்சளில் உள்ள இரசாயணமானது நோய் எதிர்ப்பு அமைப்பில் டீ செல் (T-cell) என்று அழைக்கப்படுகிற வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை செயற்படுத்துகிறது.

டீ செல் என்பது நோய் எதிர்ப்பு அமைப்பில் நோய் ஏற்படுவதற்கு எதிராக செயற்படும் கலமாகும்.

மஞ்சளும் அழற்சி நீக்கியாக தொழிற்படும் ஒரு மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது.

6. விதைகள்

பாதாமில் விட்டமின் E, மங்கனீஸ், மக்னீசியம், நார்சத்து என்பன அதிகளவு உள்ளன. விட்டமின் E ஆனது உடலை நோய் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் மற்றுமொரு ஊட்டச்சத்து ஆகும்.

பாதம் ஆரோக்கியமான கொழுப்பை உள்ளடக்கியுள்ளது. உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் செங்குருதிச் சிறுதுணிக்கைகள் உற்பத்திக்கு விட்டமின் E உதவி புரிகின்றது.

ஆகவே இச்செயற்பாடு நோய் எதிர்ப்பு அமைப்பை மேலும் வலிமையாக்குகிறது. தினமும் 4-6 பாதம் விதைகளை உட்கொள்வது சிறந்தது.

பாதம் போன்று சத்துக்கள் நிறைந்த மற்றுமொரு விதை தான் சூரியகாந்தி விதை.

இதிலும் பொஸ்பரசு (Phosphorous), மக்னீசியம், விட்டமின் B-6, விட்டமின் E ஆகியன அதிகம் உள்ளன. அத்துடன் செலேனியமும் உண்டு.

நோய் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டை பராமரிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் விட்டமின் E மிக முக்கியமானதாகும்.

7. க்ரீன் டீ (Green Tea)

தேயிலையில் அதிக அளவான ஃப்லவொனொயிட்கள் மற்றும் பொலிபெனோல்கள் (Polyphenols) உள்ளன.

இருந்தபோதிலும் க்ரீன் டீயில் எபிகலோகெடெசின் கெலட் (Epigallocatechin Gallate (ECCG)) எனும் ஆற்றல் மிக்க ஆண்டியொக்சிடண்ட் உள்ளது.

இது நோய் எதிர்ப்பு செயற்பாட்டை மேம்படுத்துகிறது.

அத்துடன் க்ரீன் டீயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் உடலில் உள்ள நச்சுக்களையும் மற்ற கழிவு பொருட்களையும் வெளியேற்றி நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

8. பால் உணவுகள்

தயிரில் விட்டமின் D நிறைந்து காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு அமைப்பை சீராக்குவதுடன் நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

அத்தோடு, தயிரில் மிகச்சிறிய நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளன. இவை குடலில் நேரடியாக செயற்படுகின்றன.

சீரான  செரிமானத்திற்கும் நச்சுத்தன்மையை அகற்றுவதற்கும் நோய் எதிர்ப்பு செயற்பாட்டிற்கும் குடல் வாழ் நுண்ணுயிரகள் மிக அவசியம்.

9. கடல் உணவுகள்

துத்தநாகம் (Zinc) வைரஸ் தாக்கத்திற்கு எதிராக செயற்படக்கூடிய ஒரு கனிமம் ஆகும். சிப்பியில் துத்தநாகம் பெருமளவு உள்ளது. இத்துத்தநாகமானது வெண்குருதி சிறுதுணிக்கைகளை உருவாக்கி செயற்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது.

சிப்பியில் துத்தநாகத்துடன், செலேனியம், இரும்புச்சத்து, விட்டமின் A, விட்டமின் C, புரதம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

அதே அளவான சத்துக்கள் நண்டு, சிங்க இறால் போன்றவற்றிலும் உண்டு. சிப்பி உட்கொள்ளாதவர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வஞ்சிர மீன், சூரை மீன் போன்ற மீன் வகைகளில் (Omega 3 Fatty Acids) ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவ்வமிலங்களும் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கி தொற்றுக்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன.

10. இறைச்சி

கோழி, வாத்து மற்றும் வான்கோழி இறைச்சிகளில் விட்டமின் B-6 அதிகம் உள்ளது. இந்த விட்டமின் உடலில் நடக்கும் பெரும்பாலான இரசாயண தாக்கங்களுக்கு மிக முக்கியமானதாகும்.

மேலும் ஆரோக்கியமான செங்குருதி சிறுத்துணிக்கைகளின் உருவாக்கத்திற்கு இது இன்றியமையாத ஒன்றாகும்.

பொதுவாக கோழி சூப் சளிக்காய்ச்சல்களுக்கு ஒரு சிறந்த பாட்டி வைத்தியம் ஆகும். இதில் உள்ள உட்பொருட்களின் கலவை வைரஸ்களிலிருந்து உடலை பாதுகாத்து உடலுக்கு ஊக்கத்தையும் கொடுக்கின்றன.

ஆகவே, நாம் தினமும் உணவில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கட்டாயமாக சேர்த்துக்கொள்ளவேண்டும். பல வகையான வைரஸ்களால் மக்கள் நோய்வாய்ப்படுவதை அறிய முடிகிறது.

மேலும் வாசிக்க:

எனவே, தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் சிறந்த உணவுகளை உட்கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *