நம் அன்றாட வாழ்க்கையானது மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த நேரத்தில் கூடுதலான வேலைகளை செய்ய வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறோம். தினமும் வேறுபட்ட மனநிலைகளையுடைய மனிதர்களை பார்க்கிறோம்; சந்திக்கிறோம். எப்போதுமே பிரச்சினைகள், கவலைகள், கோபங்கள் என்பன நம்மை சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால் அடிப்படையில் என்னவாகும் என்றால் மன அழித்தம் என்ற ஒன்று தான் வருகிறது. மன அழுத்தத்தில் எம்மால் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய இயலாது. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் முதலில் மன அமைதி இருக்க வேண்டும் அல்லவா! மன அழுத்தத்தை எளிமையாக எவ்வாறு போக்கலாம் என பார்ப்போம்.
1. உடற்பயிற்சி
மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த முறை என்று இதை சொல்லமுடியும். உடல் பயிற்சி செய்கையில் உடலுக்கு அழுத்தம் கொடுக்கும் போது மனதில் உள்ள அழுத்தம் தானாகவே குறைக்கப்படுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் வலிமை பெறும். அதனால் உங்கள் மனதிற்கு ஒரு புது நம்பிக்கை பிறக்கும். அந்நிலையில் மனதிலிருக்கும் கவலையின் பாதிப்பு குறைந்து அதற்கான பிரச்சினையை தீர்க்க முடியும் என்கிற சக்தி உங்கள் மனதில் உருவாகும்.
உடற்பயிற்சி செய்வதால் கோர்டிசோல் (Cortisol) எனும் ஹார்மோன் (Hormone) உருவாவது குறைக்கப்படுகிறது. இந்த ஹார்மோனானது மன அழுத்தத்தை அதிகரிக்கும்; உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்; நோய் எதிர்ப்பு அமைப்பை ஒடுக்கும்; எலும்பு வளர்ச்சியை குறைக்கும். ஆகவே உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறைவது மட்டுமன்றி பல நன்மைகளும் ஏற்படும்.
2. தியானம்
தியானம் செய்வதால் எந்தவொரு பிரச்சினையிலும் தெளிவான முடிவை எடுக்கக்கூடிய ஆற்றலை பெறமுடியும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகள், கவலைகள் உருவாகும் பட்சத்தில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அப்பிரச்சினைகளை எவ்வாறு சரியான முறையில் தீர்ப்பது என்று யோசிக்க கூட மனம் தயாராக இருக்காது.
தினமும் தியானம் செய்தால் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதற்குள் ஒரு இடைவெளியை மனதால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதன்போது பிரச்சினையை சரியாக இனங்கண்டு அதை ஒழுங்குபடுத்த முடியும். இதனால் மன அழுத்தமான சூழ்நிலைகளில் கூட ஒரு விடயத்தை கூர்ந்து கவனித்து தெளிவான முறையில் கையாளக்கூடிய ஆற்றலை தியானம் அளிக்கிறது.
3. ஆழ்ந்த சுவாசம்
மன அழுத்தம் அதிகரிக்கையில் மன அழுத்த ஹார்மோன்கள் இயங்க ஆரம்பிக்கும். இதன்போது இதய துடிப்பு அதிகரித்தல், விரைவாக சுவாசித்தல், இரத்த நாளங்கள் சுருக்கப்படல் போன்றவகையான செயற்பாடுகள் உடலினுள் நிகழும். ஆழமாக சுவாசிக்கும் போது உடலுக்கு ஒக்சிஜன் கிடைக்கும் அளவு அதிகரிக்கிறது. இந்நிலையில் இரத்த அழுத்தம் குறைதல், மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவு குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி செயற்படல், உடல் வலிமை அதிகரித்தல், மனம் அமைதி பெறல் ஆகியவை நடைபெறும். திடீரென அதிகரிக்கும் மன அழுத்தத்திற்கு இம்முறை சிறந்த நிவாரணமாகும்.
4. நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை கழித்தல்
மன அழுத்தம் கூடும் போது மனம் பல விதமாக யோசனை செய்யும். அந்நேரத்தில் பிழையான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. மனதுக்கு பிடித்தவர்கள் நண்பர்கள் அல்லது குடும்ப அங்கத்தவர்களுடன் நேரத்தை கழிக்கும் போது பிரச்சினைகள் மறக்கப்பட்டு மனம் அமைதி அடையும். மன அழுத்தத்திற்கான காரணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் கூறும் ஆறுதல் மனதுக்கு தைரியத்தை அளிக்கும். அதைவிட சிறு குழந்தைகளுடன் நேரத்தை கழித்தால் மன அழுத்தம் முற்றிலும் குறைய வாய்ப்புள்ளது.
5. இனிமையான இசையை செவிமடுத்தல்
இசை என்பது மன ரீதியான அனைத்து கவலைகளையும் போக்கவல்லது. இனிமையான இசையை கேட்கும் போது பிரச்சினைகளை மறந்து நமது மனதை வேறு திசையில் கொண்டு செல்ல உதவும். அவ்வாறிருக்கையில் அழுத்தம் குறைக்கப்படுகிறது. அத்துடன் ஊக்கம் அளிக்கிற பாடல் வரிகளை கொண்ட பாடல்களை கேட்கையில் மனதுக்கு ஒரு புது சக்தி கிடைக்கிறது. அந்நிலையில் மனம் மிகவும் இலேசாகும்.
6. நேர்மறையாக யோசித்தல்
நமக்கு பிரச்சினைகள், கவலைகள் ஏற்படுகையில் எப்போதும் எதிர்மறையான எண்ணங்களே மனதில் தோன்றும். “என்னடா இவ்வாறு எல்லாம் நடக்கிறதே” என்றவாறான எண்ணங்கள் தான் முதலில் தோன்றும். அவ்வாறு எதிர்மறையாக மனதிற்குள் எழும் விடயங்களை நேர்மறையாக மாற்ற வேண்டும். எப்போதும் நேர்மறையாக சிந்திப்பதால் மட்டுமே மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. இது நடக்காது, முடியாது என்ற சொற்களை நடக்கும், முடியும் என்று மனதில் உறுதியாக நினைக்க வேண்டும். அப்பொழுதே எவ்வாறான கஷ்டங்களிலும் பிரச்சினையை கண்டு பயப்படாமல் துணிந்து அதை சரியாக செய்து முடிக்க முடியும்.
7. இயற்கையோடு இணைந்து இருத்தல்
இயற்கையானது பல சுவாரஸ்யமான அம்சங்களை கொண்ட ஒரு பொக்கிஷம் என்று கூறலாம். எப்போதும் மரம், செடி, கொடி, நீர்நிலைகள் போன்றவற்றை காணுதல் அல்லது காடுகளில் உலாவுதல் போன்ற செயல்கள் மனதை அமைதிப்படுத்தும். மன அழுத்தம் அதிகமான நேரத்தில் சற்று நடந்து போகும் போது காட்சிகள் மாறும் நேரத்தில் மனதில் இருக்கும் அழுத்தமும் குறையும்.
அதைவிட எளிமையான ஒரு விடயத்தை கூறமுடியும். என்னவென்றால் நாம் வீட்டுத்தோட்டத்தில் பூச்செடிகளை வளர்க்கும் போதும் அதை பராமரிக்கும் போதும் மனதில் ஒரு புதுவித சந்தோஷம் எழும். அவற்றில் பூத்துக்குழுங்கும் பூக்களை பார்த்தல் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதுவே மன அழுத்தம் குறைவதற்கு துணையாக இருக்கும்.
8. மனம் விட்டு சிரித்தல்
மனம் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று கூறுவார்கள். அதற்கமைய எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தால் எந்த நோயும் பெரிதும் பாதிக்காது. சிரிப்பானது மன அழுத்தம், வலி, மனக்குழப்பம் போன்றவற்றுக்கான மாற்றுமருந்தாகும். மன அழுத்தமான சந்தர்ப்பங்களில் மனம் விட்டு சிரித்தால் உங்களது மனநிலையை முழுமையாக மாற்றுக்கூடிய சக்தி சிரிப்பிற்கு உண்டு. நகைச்சுவையானவற்றை வாசித்தல், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுதல் அல்லது நகைச்சுவையான கானொளிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தல் ஆகிய அம்சங்களில் நன்றாக சிரிக்க முடியும். இதன்போது உங்களது மனதில் ஒரு மாற்றம் உருவாகி அழுத்தம் குறைவதை உங்களால் உணரமுடியும்.
9. செல்லப்பிராணிகளுடன் விளையாடல்
செல்லப்பிராணி என்பது நமக்கு இன்னொரு நண்பன் என்றே கூறலாம். உண்மையான பாசத்தை காட்டினால் நம் மீது அதே பாசத்துடன் நம்மை சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். பொதுவாக வீடுகளில் நாய், பூனை முதலியவற்றை வளர்ப்பார்கள். அவற்றுடன் விளையாடும் போது இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது; நரம்பு மண்டல ஆரோக்கியம் அதிகரிக்கிறது; உடலுக்கு ஒரு உடற்பயிற்சி தானாகவே கிடைக்கிறது; தனிமையாக இருக்கும் உணர்வை குறைக்கிறது; சிரிக்க வைக்கிறது. இவ்வாறான நன்மைகள் செல்லப்பிராணிகளுடன் விளையாடும் போது கிடைக்கும். மேலும் பறவைகளை பார்த்துக்கொண்டிருத்தல் அல்லது மீன்களை வளர்த்தல் என்பனவும் சிறந்தது. அவை அங்கும் இங்கும் அலையும் போது நாம் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தால் மன அழுத்தம் குறையும்.
10. ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்
சில வகையான உணவுகளில் கூட மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மன அழுத்தமான நேரத்தில் நாம் பிடித்த உணவை உண்ணும் போது மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. எவ்வாறென்றால் பிடித்த உணவை உண்டால் முதலில் வயிறு நிறையும். பிறகு மனதுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அத்துடன் சோர்வான நிலையிலுள்ள உடலுக்கு சக்தி கிடைக்கும். மன அழுத்தமான சந்தர்ப்பத்தில் விட்டமின் B, C நிறைந்துள்ள உணவுகளை உண்ணுவது மிக சிறந்தது.
மன அழுத்தத்தை சில நேரங்களில் திடீரென குறைக்க இயலாது. மேலே குறிப்பிட்ட வழிகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். எப்போதுமே மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்காமல் நமது கட்டுப்பாட்டில் மனம் இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதில் தீர்க்க முடியும்.