பழங்களில் இயற்கையாகவே நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பழங்களில் உள்ள நன்மைகள் (Benefits of fruits) பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நாம் தினமும் நமது உணவில் பழங்களை சேர்த்துக்கொள்ள தவருகிறோம்.
துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி தினமும் அவற்றை உட்கொள்ள பழகிக்கொண்ட நாம் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இதனால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு உடலின் ஆரோக்கியம் குறைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன.
உடலின் அழகு, ஆரோக்கியம், வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற அனைத்து விடயங்களுக்கும் பழங்கள் (Fruits) உதவுகின்றன. பழங்களில் உள்ள மருத்துவ குணங்களையும் (Medicinal properties of the fruits) பழங்களின் நன்மைகள் பற்றியும் (Benefits of fruits) தற்போது பார்ப்போம்.
மாம்பழம் (Mango)
மாம்பழத்தில் அதிகளவு ஆண்டி ஒக்சிடெண்ட்கள் (Anti-Oxidants) உள்ளன. அவை புற்றுநோய்க்கு எதிராக செயற்பட்டு உடலை பாதுகாக்கின்றன. இப்பழத்தில் விட்டமின் சி, நார்சத்து மற்றும் பெக்டீன் (Pectin) எனும் பதார்த்தம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து கொலஸ்ரோலை (Cholesterol) கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.
மாம்பழம் சாப்பிட்டால் அவற்றில் இருக்கும் இனிப்பு சுவை காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் என மக்கள் நினைப்பார்கள்.
ஆனால் உண்மையிலேயே மாம்பழத்தில் க்ளைசெமிக் குறியீடு (Glycemic Index) குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயை அது கட்டுப்படுத்துகிறது.
மாம்பழத்தில் அதிக நார்சத்து மற்றும் நீர் அடங்கியிருப்பதால் சீரான முறையில் சமிபாடு அடையும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். அத்துடன் விட்டமின் ஏ அதிகமாக அடங்கியிருப்பதால் தலைமுடி நன்றாக வளரும்.
மேலும் விட்டமின் ஏ இருப்பதால் பொலிவான தோலை பெறலாம். கண்பார்வைக்கும் மாம்பழம் மிகச்சிறந்தது.
வாழைப்பழம் (Banana)
வாழைப்பழம் மலச்சிக்கல் மற்றும் மூலநோய்க்கு ஒரு சிறந்த நிவாரணி. தினமும் சாப்பிட்டுவர அப்பிரச்சினை தீரும். அத்துடன் தினமும் சாப்பிடும் போது குடல் புண்கள் இருந்தால் அவை குணமாகி சீரான ஜீரணமும் நடைபெறும்.
வாழைப்பழத்தில் அதிகளவு நார்சத்து, பொட்டாசியம், விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6 என்பன இருக்கின்றன. பொட்டாசியமானது இருதய நோய்கள் வராமல் பாதுகாக்கின்றன. மேலும் பக்கவாதம் ஏற்படாமல் வைத்திருப்பதோடு கிட்னியில் கற்கள் உருவாவதையும் தடுக்கின்றது.
வாழைப்பழத்தில் ட்ரிப்தோபன் (Tryptophan) மற்றும் அமினோ அமிலங்கள் (Amino Acids) இருப்பதால் நல்ல நினைவாற்றலை கொடுப்பதோடு உடலுக்கு விரைவாக சக்தியை கொடுக்கும். அத்தோடு மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்பதோடு மனதை புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.
ஆப்பிள் (Apple)
ஆப்பிள் பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்பொருளானது குடலிலுள்ள கெட்ட கொலொஸ்ட்ரோலை கரையச்செய்து ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறையச்செய்து நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இப்பழத்தை அவசியம் உண்ணவேண்டும். ஆப்பிளில் உள்ள ஆண்டி ஒக்சிடெண்ட் எலும்புகள் உறுதியாக பெரிதும் உதவுகிறது. மேலும் இப்பழம் பித்தப்பையில் பித்தக்கற்கள் உருவாவதை தடுக்கின்றன.
ஃப்ளவொனொய்ட் க்வார்செடிண் (Flavonoid Quercetin) எனும் பதார்த்தம் இரத்த குழாய் நாளங்களின் வீக்கத்தை குறைத்து உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கின்றது.
திராட்சை (Grapes)
இப்பழத்தில் மிக அதிகளவு தாவர ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே பல வகையான புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கின்றதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகிறது.
தினமும் திராட்சை சாப்பிடுவதால் முகம் அழகாகவும் மேனி பொலிவாகவும் இருக்கும். தோல் சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றம் என்றுமே காக்கப்படும்.
முக்கியமாக இப்பழத்தில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) எனும் பதார்த்தம் முகப்பருக்களை நீக்கி முகத்திலுள்ள கிருமிகளை அழித்து பொலிவை தரக்கூடியது.
மேலும் இப்பதார்த்தம் விழித்திரை கலங்களை பாதுகாப்பதுடன் கண்விழி விறைப்பு நோய், கண்ணில் பூவிழும் நோய், நீரிழிவு நோயால் ஏற்படும் கண்நோய்கள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.
இப்பழத்தில் குறைந்த அளவு க்ளைசெமிக் குறியீடு இருப்பதால் இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளர்கள் இப்பழத்தை தினமும் உட்கொள்வது சிறந்தது.
பேரீச்சம்பழம் (Dates)
இதில் அதிகளவு நார்சத்துகள் அடங்கியுள்ளன. மலச்சிக்கல் பிரச்சினை இருப்பின் இப்பழத்தை உண்பதால் நல்ல பலனை பெறலாம்.
பேரீச்சம்பழத்தில் புரதம் அதிகமாக இருப்பதால் தசைகள் நன்றாக உறுதியை பெறுவதோடு உடம்பு வலுவாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்வோர் அவசியம் உட்கொள்ள வேண்டும். இப்பழத்தில் அதிகமாக மக்னீசியம், செப்பு, இரும்புச்சத்து, மங்கனீஸ் ஆகியன இருப்பதால் எலும்புகள் நன்றாக உறுதிபெறும்.
மேலும் ஒஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) வராமல் தடுக்கின்றது. பேரீச்சம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலம் சீராக இயங்க வழிவகுக்கிறது.
தினமும் இப்பழம் சாப்பிட்டு வரும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். பொதுவாக இரத்தம் குறைவாக இருக்கும் நோயாளர்களுக்கு வைத்தியர்கள் பேரீச்சம்பழம் உண்ணும்படி அறிவுறுத்துவார்கள்.
மேலும் சில பழங்களின் நன்மைகள் (Benefits of fruits) பற்றி பார்ப்போம்.
மாதுளை (Pomegranate)
மாதுளை இயற்கையால் கொடுக்கப்பட்ட ஒரு அருமையான மருந்தாகும். இப்பழத்தில் இருக்கும் ஆண்டி ஒக்சிடெண்ட்கள் பருவத்திற்கு முந்திய வயதான தோற்றத்தை போக்கவல்லது. அத்துடன் இரத்தத்தின் செறிவை அதிகரிக்கிறது.
மேலும் திடீரென காயம் ஏற்படும் வேளையில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டால் அதனை தடுத்து சீக்கிரமாக உறையச்செய்யும் ஆற்றல் இந்த பழத்திலுள்ள ஆண்டி ஒக்சிடெண்ட்களுக்கு உள்ளது.
தினமும் உட்கொள்ளும் சில உணவுகளில் உள்ள கொழுப்புகள் இரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
மாதுளம்பழம் தினந்தோரும் உட்கொள்வதால் இரத்த நாளங்களில் உள்ள மேலதிக கெட்ட கொழுப்பை நீக்கி இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. மூட்டுக்களிலுள்ள சவ்வுப்பகுதியை வலுவடைய செய்து மூட்டு வாதம் வருவதை தடுக்கிறது.
பப்பாளிப்பழம் (Papaya)
பப்பாளிப்பழம் உணவு சீராக சமிபாடு அடைய உதவும் சிறந்த பழமாகும். அதில் அடங்கியுள்ள பபாயின் (Papain) என்கிற செரிமான பொருள் நார்சத்துடன் இணைந்து உணவு ஜீரணமாக வழிவகுக்கிறது.
இப்பழத்தில் இருக்கும் நார்சத்து, பொட்டாசியம் மற்றும் விட்டமின் வகைகள் இருதய நோய்கள் வருவதை தடுக்கின்றன.
இப்பழம் இயற்கையான தோல் சுத்தப்படுத்தி என்று கூறலாம். அப்பழத்திலுள்ள நொதியமானது தோலிலுள்ள மாசுக்களை நீக்கி சுருக்கங்களை இல்லாமல் செய்து பிரகாசமான தோற்றத்தை கொடுக்கவல்லது.
பப்பாளி பழத்தில் அதிகளவு உள்ள விட்டமின் ஏ ஆனது கண்நோய்களிலிருந்து பாதுகாத்து கண்ணிற்கு நல்ல பார்வையை கொடுக்கக்கூடியது.
தோடம்பழம் (Orange)
தோடம்பழத்தில் அதிகமாக இருப்பது விட்டமின் சி தான். இவை முக்கியமாக பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
விட்டமின் சி ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சலித்தொல்லையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கிறது.
மேலும் காது சம்பந்தமான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. தோடம்பழத்தில் உள்ள போலிக் அமிலம் (Folic Acid) மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கட்டாயம் கொடுக்கவேண்டிய ஒரு பழம் இது.
இப்பழத்தில் இருக்கும் ஃப்ளவொனொய்ட்கள் பல்நோய் தொற்றுக்கு எதிராக போராடக்கூடியது. இப்பழத்தில் அடங்கியுள்ள கல்சியமானது பற்கள் மற்றும் எலும்புகளை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது.
அன்னாசி (Pineapple)
அன்னாசிப்பழம் பல்லீறு பிரச்சினைகளை சரி செய்து பற்களுக்கு வலிமையை அளிக்கக்கூடியது. அன்னாசிப்பழத்திலுள்ள பொட்டாசியத்தின் குழாய் விரிவு பதார்த்தங்கள் இரத்த நாடி, நாளங்களில் ஏற்படும் இரத்த உறைவை நீக்கும் வல்லமை பொருந்தியது.
இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ஆதெரோஸ்க்லேரோசிஸ் (Atherosclerosis) போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. பொட்டாசியத்துடன் செப்பு இருப்பதால் இரத்தத்தின் செங்குருதி சிறு துணிக்கைகளின் அளவு அதிகரிக்கின்றன.
எனவே சீரான இரத்த ஓட்டம் உடல் முழுவதும் கிடைக்கிறது. இப்பழத்தில் உள்ள விட்டமின் சி, ப்ரோமெலைன் (Bromelain) மற்றும் பீட்டா கரோடீன் (Beta Carotene) ஆகியன ஆஸ்துமா நோயை படிப்படியாக குறைப்பதோடு மீண்டும் வராமலும் தடுக்கிறது.
தர்பூசணி (Watermelon)
இது அதிகளவு நீர்ச்சத்தை கொண்டுள்ள குளிர்ச்சியான பழமாகும். இது மிகையுடற்சூட்டை தனிக்கக்கூடிய ஒரு சிறந்த பழம் என்று சொல்லலாம்.
இப்பழத்தில் இருக்கும் பொட்டாசியமானது நாள்பட்ட கிட்னி நோயால் அவதிப்படுவோருக்கு நல்ல பலனை அளிக்கக்கூடியது.
சிற்றுளின் (Citrulline) எனப்படும் அமினோ அமிலம் அடங்கியிருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் பேணுவதற்கு உதவுகிறது. தர்பூசணியில் விட்டமின் பி நிறையவே காணப்படுகிறது.
ஆகவே உடலுக்கு தேவையான சக்தியை கொடுத்தால் உற்சாகமாக இருப்பதற்கு துணைபுரிகிறது.
பழங்கள் இயற்கையிலிருந்து கிடைக்கின்ற ஒரு வரப்பிரசாதமாகும். பழங்கள் அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக்கூடிய இயற்கை மருந்தாகும். ஒவ்வொரு பழத்திலும் (Fruit) பல வகையான நோய்களை தீர்க்கக்கூடிய பதார்த்தங்கள் உள்ளன.
பழங்களில் உள்ள நன்மைகள் (Benefits of fruits) பற்றி தற்போது நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
ஆகவே தினமும் உணவில் பழங்களை சேர்த்துக்கொள்வதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் நோயற்ற வாழ்க்கையையும் வாழ முடியும்.
இதையும் வாசிக்க: