நடிகர் சூர்யா பற்றிய ஒரு பார்வை

Personality
Spread the love

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தனது வேறுபட்ட நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் தெரிவு செய்யும் கதைகளே இதற்கு காரணம். ஏனென்றால் ஒரே மாதிரி அல்லாது வேறுபட்ட கதாப்பாத்திரங்களையுடைய கதைகளை தெரிவு செய்து நடிக்கின்றமையால் ஆகும். அதுமட்டுமல்லாமல் கதையின் கதாப்பாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றி அந்த கதாப்பாத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதற்காக கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர்.

பிறப்பு

சூர்யா 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி தமிழ் நாட்டில் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை பிரபல நடிகர் சிவகுமார் ஆகும். தாயாரின் பெயர் லக்ஷ்மி. சூர்யாவிற்கு கார்த்தி என்று தம்பியும் பிருந்தா என்று தங்கையும் உண்டு. கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் ஆவார். சூர்யாவின் இயற்பெயர் சரவணன்.

ஆரம்ப வாழ்க்கை

சூர்யா பத்ம சேஷாத்ரி பாலா பவண் (Padma Seshadri Bala Bhavan) என்ற பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்றார். பிறகு இந்திய சென் பெடெஸ் ஆஞ்லோ மேல்நிலைப்பள்ளியில் (St Bede`s Anglo Indian Higher Secondary School) படித்தார். தனது பட்டப்படிப்பை சென்னை இலொயொலா கல்லூரியில் (Loyola College Chennai) முடித்தார்.சூர்யா திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையில் எட்டு மாதமாக பணிபுரிந்தார். தான் நடிகர் சிவகுமாரின் மகன் என்று தெரிந்தால் தனிச்சலுகை கிடைக்கும் என்று எண்ணினார். அதை விரும்பாத சூர்யா தன் முதலாளியிடம் தான் சிவகுமாரின் மகன் என்று வெளிப்படுத்தாமல் இருந்தார். இருந்தபொழுதிலும் கூட அந்த முதலாளி சூர்யா நடிகர் சிவகுமாரின் மகன் என்று அறிந்துகொண்டார். பிறகு இயக்குநர் வசந்த் அவர்கள் தனது ஆசை திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் கேட்டார். அச்சமயத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லையென அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். தனது 22 வது வயதில் இயக்குநர் வசந்தின் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் சரவணன் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு நடிகர் இருந்ததால் பெயரில் பிரச்சினை வரும் என்று மணிரத்னம் அவர்கள் சூர்யாவின் சரவணன் என்ற இயற்பெயரை சூர்யாவாக மாற்றி வைத்தார். ஆரம்பத்தில் சூர்யா நடிப்பில் சற்று போராடினார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக நீண்ட வசனங்கள் பேசி நடிப்பது, சண்டை காட்சிகள், நடனம் போன்றவற்றில் கொஞ்சம் கஷ்டப்பட்டார். நடிகர் ரகுவரன் அவர்கள் சூர்யாவின் ஒரு சிறந்த வழிகாட்டியாவார். நீ தந்தையின் நிழலில் தங்கியிருக்காமல் உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கு என ரகுவரன் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

சிறந்த படங்கள்

இயக்குநர் பாலா இயக்கத்தில் தண்டனை கைதியாக நந்தா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சூர்யா. இத்திரைப்படம் அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்ததென்றே சொல்ல வேண்டும். இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. அதற்கு பின் இயக்குநர் விக்ரமண் இயக்கத்தில் உருவான உன்னை நினைத்து மற்றும் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்களின் வெற்றியின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக்கொண்டார். இத்திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.2003 ஆம் ஆண்டு முதன் முதலாக காவல் துறை அதிகாரியாக இயக்குநர் கௌத மேனனின் காக்க காக்க என்ற திரைப்படத்தில் நடித்தார். இது மாபெரும் வெற்றியைப்பெற்று பிளாக்பஸ்டர் (Blockbuster) படமானது. அதற்கு பின் இயக்குநர் பாலாவின் படைப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் (Filmfare Award) விருதையும் பெற்றுக்கொடுத்தது. சூர்யா முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் பேரழகன் ஊனமுற்ற கதாப்பாத்திரத்திலும் துத்துச்சண்டை வீரர் கதாப்பாத்திரத்திலும் தோன்றியிருப்பார் சூர்யா. அதற்கு பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்து அவரது இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டார்.

2004 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸின் கஜினி திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தில் குறுகிய கால நினைவு இழப்பு நோயாளியாக (Short-term Memory Loss) நடித்திருப்பார். கஜினி வெளியாகி அவ்வருடத்திற்கான பிளக்பஸ்டார் படமானது. அதற்கு பின் ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.2008 ஆம் ஆண்டு மீண்டும் கௌத மேனனுடன் கைக்கோர்த்த சூர்யா வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்தார். அது சூர்யாவின் பட வரிசையில் மிக முக்கியமான படமாக மாறியது. ஏனென்றால் அத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் மூன்று காலகட்டத்துக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதாவது 16 வயது பையன், ஒரு சாதாரண வயது இளைஞன் மற்றும் வயதான தந்தை போன்ற காலகட்டத்துக்கு ஏற்றவகையில் நடித்து தன் திறமையை சிறந்த முறையில் வெளிக்காட்டியிருந்தார். பிறகு அயன், ஆதவன், சிங்கம் போன்ற வெற்றிப்படங்களின் மூலம் மேலும் தனது நடிப்பை வெளிக்காட்டி இரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

2007 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7 ஆம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்தார். அது ஒரு அறிவியல் சார்ந்த படமாக இருந்தபொழுதிலும் கூட வர்த்தகரீதியில் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு மீண்டும் இயக்குநர் கே.வி ஆனந்துடன் இணைந்து கொண்டார் சூர்யா. ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் மாற்றான் என்ற படத்தில் சிறப்பாக நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களை பெற்றார். பின்னர் சிங்கம் 2, அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, பசங்க 2, 24 மற்றும் சிங்கம் 3 போன்ற திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக விக்னேஷ் சிவம் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நந்த கோபாலன் குமரன் (NGK) என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சூர்யா பெற்ற விருதுகள்

தமிழ் நாட்டு மாநில திரைப்பட விருதுகள் (Tamil Nadu State Film Awards)  

3

எடிசன் விருதுகள் (Edison Awards)

3

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards South)

4

விஜய் விருதுகள் (Vijay Awards)

4

இட்பா சிறந்த நடிகர் விருது (ITFA Best Actor Award)

1

சீ சினி விருது (Zee Cine Award)

1

மற்ற விருதுகள் (Other Awards)

7

 மேலும் அகரம் எனும் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவி படிப்பை மேற்கொள்ள வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு தனது அறக்கட்டளை நிறுவனத்தின் மூலம் கல்வியை வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறார். திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் தனது நடைமுறை வாழ்க்கையிலும் சிறந்த கதாநாயகனாக வலம் வருகிறார் சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *