Highest Grossing Films of India » இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூலை பெற்ற முதல் ஐந்து படங்களும் அவற்றின் விபரங்களும்

இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூலை பெற்ற முதல் ஐந்து படங்களும் அவற்றின் விபரங்களும்

Movie
Spread the love

இந்திய சினிமாவானது உலக சினிமாவிற்கு இணையாக தற்போது வளர்ந்து வருகிறது. இந்திய சினிமாவிலுள்ள கலைஞர்களின் அபார திறமைகள் தான் இதற்கு காரணம். பெரும்பாலான இந்திய திரைப்படங்கள் உலக நாடுகளில் திரையிடப்படுவதால் அவற்றை ரசிக்கும் பார்வையாளர்களும் அதிகரித்துவிட்டார்கள். அதுமட்டுமன்றி இந்திய நடிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதும் இந்திய கலைஞர்கள் உலக சினிமாக்களில் பணியாற்றுவதும் மிகவும் பெருமைப்படவேண்டிய விடயமாகும். இந்திய சினிமாவில் ஏராளமான மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இந்திய திரைப்படங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் உலக அளவில் செய்த வசூல் பற்றிய விபரங்களும் சாதனைகளையும் பார்ப்போம்.

1. டங்கல் (Dangal)

இது பொலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் (Aamir Khan) தயாரித்து நடித்த ஒரு சிறந்த படமாகும். அவருடன் இணைந்து யூடிவி மோஷன் பிக்சர்ஸ் (UTV Motion Pictures) மற்றும் வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் இந்தியா (Walt Disney Pictures India) ஆகிய தயாரிப்பு நிறுவனங்களும் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தன. 70 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலக அளவில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது. உலக அளவில் இத்திரைப்படம் ஏறத்தாழ 2000 – 2100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஹிந்தி மொழி படமாக வெளிவந்த இத்திரைப்படம் போகாட் (Phogat) குடும்பத்தினரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அதாவது இந்தியாவின் மிகச்சிறந்த மல்யுத்த பயிற்சியாளரான மஹவிர் சிங் போகாட் (Mahavir Singh Phogat) என்பவர் தனது மகள்களான கீதா போகாட் (Geeta Phogat) மற்றும் பபிதா குமாரி (Babita Kumari) ஆகியோரை இந்தியாவின் முதல் உலக மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்குவதற்கு பயிற்சி வழங்கி அவர்களை சாதனையாளர்களாக மாற்றிய கதையாகும்.

நடிகர்கள்

 • அமீர்கான்
 • சாக்ஷி தன்வர் (Sakshi Tanwar)
 • பாத்திமா சனா ஷய்க் (Fatima Sana Shaikh)
 • சய்ரா வாசிம் (Zaira Wasim)
 • சண்யா மல்ஹோத்ரா (Sanya Malhotra)
 • சுஹானி பட்நாகர் (Suhani Bhatnagar)
 • அப்பர்ஷக்தி குராணா (Aparshakti Khurana)
 • ரித்விக் சஹோர் (Ritwik Sahore)
 • கிரிஷ் குல்கரணி (Girish Kulkarni)

இத்திரைப்படத்தை நித்திஷ் திவாரி (Nitesh Tiwari) என்பவர் இயக்கி இருந்தார். ப்ரிதம் (Pritam) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சத்யஜித் பாண்டே (Satyajit Pande) செய்ய படத்தொகுப்பு பணிகளை பல்லு சலுஜா (Ballu Saluja) கையாண்டிருக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சர்வதேச பீஜிங் திரைப்பட விழாவில் (Beijing International Film Festival) திரையிடப்பட்டது. 62 வது ஃபிலிம் ஃபெயா விருதுகள் (Filmfare Awards ) விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த சண்டை பயிற்சியாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றது. 64 வது தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 7 வது ஏஏசிடிஏ (AACTA) விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் என்ற பிரிவில் விருது வென்றது. கடந்த ஆண்டு 3 டோபன் திரைப்பட விருதுகளை (Douban Film Awards) பெற்றது. மேலும் பல விருதுகளை இப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. பாகுபலி 2 – த கொன்க்ளூஷன் (The Conclusion)

இயக்குநர் S.S ராஜமௌலியால் இயக்கப்பட்ட இப்படம் ஒரு காவிய, கற்பனை, அதிரடி திரைப்படமாகும். இதற்கு கதை எழுதியுள்ளார் S.S ராஜமௌலியின் தந்தையான K.V விஜயேந்திர பிரசாத். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வெளிவந்த இப்படத்தை ஆர்கா மீடியா வர்க்ஸ் (Arka Media Works) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 1796 கோடி வசூலை பெற்றது.

நடிகர்கள்

 • பிரபாஸ்
 • ராணா தாகுபாட்டி
 • அனுஷ்கா ஷெட்டி
 • தமன்னா
 • ரம்யா கிருஷ்ணன்
 • நாசர்
 • சத்யராஜ்
 • சுப்பராஜு (Subbaraju)

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்ட இப்படத்தை K.K செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். M.M கீரவாணியால் இசையமைக்கப்பட்ட இப்படத்திற்கு கோட்டாகிரி வெங்கடேஷ்வர ராவோ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சண்டைப்பயிற்சி வழங்கியவர் பீட்டர் ஹெயின் ஆகும். கலை இயக்குநராக செயலாற்றியுள்ளார் சாபு சிரில் அவர்கள். விசுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) R.C கமலகண்ணன் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு டெல்ஸ்ட்ரா மக்கள் தேர்வு விருதை (Telstra People`s Choice Award) பெற்றது. அத்துடன் 3 தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. இத்திரைப்படம் பிரிட்டிஷ் திரைப்பட நிலையத்தில் (British Film Institute) திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

3. பஜ்ராங்கி பய்ஜான் (Bajrangi Bhaijaan)

இது ஒரு ஹிந்தி மொழி திரைப்படமாகும். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி வெளியான இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் கபிர் கான் (Kabir Khan). கதை எழுதியவர் K.V விஜயேந்திர பிரசாத் அவர்கள் ஆகும். இப்படத்தை சலமான் கான், ராக்லை வெங்கடேஷ் (Rockline Venkatesh), கபிர் கான் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். 90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 931 கோடி  ரூபாய் வசூலை பெற்றுக்கொடுத்தது.

நடிகர்கள்

 • சல்மான் கான் (Salman Khan)
 • கரீனா கபூர் (Kareena Kapoor)
 • ஹர்ஷாலி மல்ஹோட்ரா (Harshaali Malhotra)
 • நவாசுதீன் சித்திக் (Nawazuddin Siddiqui)
 • மெஹெர் விஜ் (Meher Vij)
 • குஷால் பவர் (Kushaal Pawar)
 • மீர் சர்வர் (Mir Sarwar)

இப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு செய்தவர் அசீம் மிஷ்ரா (Aseem Mishra) ஆகும். ரமேஷ்வர் S. பகட் (Rameshwar S. Bhagat) படத்தொகுப்பு செய்திருந்தார்.

இத்திரைப்படம் 63 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த பொழுதுபோக்கை வழங்கும் பிரபலமான திரைப்படம் என்ற பிரிவில் தேசிய திரைப்பட விருதை பெற்றது. அத்தோடு சிறந்த கதைக்கான ஃபிலிம் ஃபெயா விருதை பெற்றது.

4. சீக்ரட் சூப்பர்ஸ்டார் (Secret Superstar)

ஹிந்தி மொழி திரைப்படமான இப்படம் இசையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அட்வைட் சந்தன் (Advait Chandan) என்பவரால் இயக்கப்பட்ட இப்படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி திரைக்கு வந்தது. அமீர் கான் மற்றும் கிரண் ராவோ (Kiran Rao) அகிய இருவரும் தயாரித்துள்ளார்கள். 15 கோடி ரூபாய் செலவில் திரைக்கு வந்த இப்படம் 903 கோடி ரூபாய் வசூலை பெற்றது.

நடிகர்கள்

 • அமீர் கான்
 • சய்ரா வாசிம்
 • மெஹெர் விஜ்
 • ராஜ் அர்ஜுன் (Raj Arjun)
 • தீர்த் ஷர்மா (Tirth Sharma)
 • கபிர் சஜிட் (Kabir Sajid)
 • ஃபர்ருக் ஜாஃப்ஃபர் (Farrukh Jaffer)
 • மோனா அம்பேகோன்கர் (Mona Ambegaonkar)
 • ஷமத் மசும்டர் (Shamath Mazumdar)
 • மனுஜ் ஷர்மா (Manuj Sharma)

இப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் அனில் மெஹ்தா (Anil Mehta). அமீத் த்ரிவேதி (Amit Trivedi) இசையமைக்க ஹேமன்தி சர்கார் (Hemanti Sarkar) என்பவர் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டிருக்கிறார்.

சய்ரா வாசிம் அபூர்வமான சாதனைக்கான தேசிய குழந்தை விருதை பெற்றார். அத்துடன் சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த பிண்ணனி பாடகி ஆகிய பிரிவுகளில் 3 ஃபிலிம் ஃபெயா விருதுகளை இப்படம் வென்றது. சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிக அதிகமான வசூலை பெற்ற படம் என்ற பெருமை இப்படத்திற்கு கிடைத்தது.

5. பீகே (PK)

இத்திரைப்படம் அமீர் கானின் வித்தியாசமான நடிப்பில் உருவான ஒரு நகைச்சுவை படமாகும். இப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் ஹிராணி (Rajkumar Hirani). அபிஜட் ஜோஷி (Abhijat Joshi) மற்றும் ராஜ்குமார் ஹிராணி ஆகிய இருவரின் கதையில் உருவான இப்படம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி திரைக்கு வந்தது. முற்றிலும் வேறுபட்ட கதைகளத்தை கொண்ட இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி ஃபிலிம்ஸ் மற்றும் வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ் (Vinod Chopra Films) ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. 85 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக உலகம் முழுவதும் 832 கோடி ரூபாய் வசூல் படைத்தது.

நடிகர்கள்

 • அமீர் கான்
 • அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma)
 • சஞ்சய் தத் (Sanjay Dutt)
 • சுஷந்த் சிங் ராஜ்புட் (Sushant Singh Rajput)
 • போமன் இராணி (Boman Irani)
 • சௌராப் ஷுக்லா (Saurabh Shukla)
 • பரிக்ஷிட் சஹ்னி (Parikshit Sahni)
 • அமர்தீப் ஜா (Amardeep Jha)
 • ராம் சேதி (Ram Sethi)
 • ரோஹிதாஷ் கௌட் (Rohitash Gaud)
 • ரன்பீர் கபூர் (Ranbir Kapoor)

இப்படத்தின் பாடல்களுக்கு ஷாந்தனு மொய்ட்ரா (Shantanu Moitra), அஜய் அதுல் (Ajay Atul) மற்றும் அன்கிட் திவாரி (Ankit Tiwari) ஆகிய மூவரும் இசையமைத்துள்ளார்கள். அத்துடன் சஞ்சய் வாண்ட்ரேகர் (Sanjay Wandrekar),  அதுல் ரணிங்கா (Atul Raninga) ஆகியோர் பிண்ணனி இசையை வழங்கியுள்ளார்கள். C.K முரளிதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஃபாட் கண்டாகருடன் (Rifat Khandakar) இணைந்து ராஜ்குமார் ஹிராணி படத்தொகுப்பு செய்திருக்கிறார். 60 வது ஃபிலிம் ஃபெயா விருதுகள் விழாவில் 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 2 விருதுகளை வென்றது. அத்தோடு தயாரிப்பாளர்கள் சங்க திரைப்பட விருதுகள் (Producers Guild Film Awards) விழாவில் 5 விருதுகளை வென்றது. மேலும் 2 நட்சத்திர திரை விருதுகளை (Star Screen Awards) வென்றதுடன் டெல்ஸ்ட்ரா மக்கள் தெரிவு விருதையும் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.