Smart Tamil Trend

Trending Now

Google Search

A.R Rahman

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம்

Spread the love

இசை என்பது நமது வாழ்வில் ஒரு இன்றியமையாத உணர்வாக மாறிவிட்டது. இசைக்கு மயங்காதோர் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அவ்வாறு இந்திய இசை வரலாற்றிலே தனித்தன்மை வாய்ந்த இசையை வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வாழ்வில் வெற்றி கண்டவர் தான் நமது இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் (A.R Rahman) அவர்கள்.

இவரது இசையை கேட்டு ரசிக்காதவர் எவருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது இசை சிறியவர் முதல் பெரியோர் வரை எல்லா வயதினரும் மயங்கும் வகையில் புதுமையாக இருக்கிறது. இவ்வாறு தன் வாழ்வில் வெற்றி கண்ட நம் இசை நாயகனைப் பற்றி பார்ப்போம்.

ஏ.ஆர் ரகுமான் அவர்களின் ஆரம்ப வாழ்க்கை (Early life of A.R Rahman)

ஏ.ஆர் ரகுமான் அவர்கள் 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி R.K சேகர், கஸ்தூரி (தற்போதைய பெயர் கரீமா பேகம்) தம்பதிக்கு மகனாக பிறந்தார். சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் திலீப் குமார் ஆகும்.

இவரது தந்தை இசையமைப்பாளராகவும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இசைக்குழு இயக்குநராகவும் (Conductor) பணிபுரிந்தார்.

ஏ.ஆர் ரகுமான் தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் தனது குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியிருந்தது. அதன்போது வருமானத்திற்காக தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு குடும்பத்தை காப்பாற்றினார். அத்துடன் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கிட்டார் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

இசைப்பலகை (Keyboard) இயக்கக்கூடியவராக இருந்த ஏ.ஆர் ரகுமான் சிறு வயது நண்பர்களான சிவமணி, ஜோன் அந்தோனி, சுரேஸ் பீட்டர், ஜோஜோ மற்றும் ராஜா ஆகியோருடன் இசைக்குழு ஏற்பாட்டாளராக (Arranger) இருந்ததோடு “நெமிசிஸ் அவென்யூ” (Nemesis Avenue) என்கிற சென்னை சார்ந்த ராக் குழுவை (Chennai Based Rock Group) நிறுவினார்.

காலப்போக்கில் இசைப்பலகை, இணைப்படுத்தி (Synthesizer), பியானோ, ஆர்மோனியம் மற்றும் கிட்டார் ஆகியவற்றை முற்றிலும் கற்று தேர்ச்சிப்பெற்றார். இருந்தபொழுதிலும் கூட இணைப்படுத்தி மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏனென்றால், இசையையும் தொழிநுட்பத்தையும் பொருத்தமாக இணைக்கும் கருவி என்பதால் ஆகும்.

ஏ.ஆர் ரகுமான் அவர்களின் இசை வாழ்க்கையின் ஆரம்பம் (The beginning of the music career of A.R Rahman)

ஏ.ஆர் ரகுமான் அவர்கள் ஆரம்ப இசைக்கல்வியை தனராஜ் மாஸ்டரிடம் முறையாக கற்றுக்கொண்டார். தனது பதினோராவது வயதில் மலையாள இசையமைப்பாளரான M.K அர்ஜுணன் அவர்களின் இசைக்குழுவில் இசைக்கருவி வாசிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு M.S விஸ்வநாதன், இளையராஜா, ராஜ்கோடி மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோருடன் பணிபுரிந்தார்.

அதற்கு பின் சாகிர் உஷைன், குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் L.சங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். லண்டன் ட்ரிணிடி கல்லூரியில் (Trinity College London) புலமைப்பரிசில் பெற்று ட்ரிணிடி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் (Trinity College of Music) மேற்கத்திய பாரம்பரிய இசையில் (Western Classical Music) பட்டம் பெற்றார்.

அவர் தனது 23வது வயதில் தனது குடும்ப அங்கத்தவர்களுடன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். திலீப் குமார் என்ற தன் பெயரை அல்லாராக்கா ரகுமான் (Allahrakka Rahman) என மாற்றிக்கொண்டார்.

ஏ.ஆர் ரகுமான் அவர்கள் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்தார். அந்தவகையில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் வாசிக்க

ஏ.ஆர் ரகுமான் அவர்களின் சினிமாத்துறை பயணத்தின் ஆரம்பம் (The beginning of the cinema career of A.R Rahman)

1992 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்ணத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது சொந்த ஸ்டூடியோவான “ பன்சதன் ரெகோர்ட் இன் “ (Panchathan Record Inn) இல் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்.

இது ஆசியாவிலேயே இருக்கும் ஒரு அதிநவீன ஸ்டூடியோ என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதலாவது படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்ததோடு இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் உருவானது.

ஏ.ஆர் ரகுமான் அவர்களின் சாதனைகள் (Achievements of A.R Rahman)

ஒஸ்கார் விருதுகள் (Oscar Awards)

திரையுலகில் மிகப்பெரிய விருதான ஒஸ்கார் விருதை 2008 ஆம் ஆண்டு டெனி பாயில் (Danny Boyle) இயக்கத்தில் வெளியான “ஸ்லம்டோக் மில்லியனர்”  (Slumdog Millionaire) என்ற திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் இரு ஒஸ்கார் விருதுகளை 2009 ஆம் ஆண்டு பெற்றார்.

ஒஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழ் மொழியில் பேசிய போது உலகில் வாழ் அனைத்து தமிழ் பேசும் மக்களும் பெருமையடைந்தார்கள்.

பப்டா விருது (BAFTA Award)

2009 ஆம் ஆண்டு “ஸ்லம்டோக் மில்லியனர்” திரைப்படத்திற்காக சிறந்த திரைப்பட இசைக்கான பப்டா விருதை பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் ஏ.ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் குளோப் மற்றும் கிராமி விருதுகள் (Golden Globe and Grammy Awards)

2009 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை “ஸ்லம்டோக் மில்லியனர்” திரைப்படத்திற்காக பெற்றார். அதே வருடம் அதே திரைப்படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவு தொகுப்புக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் இரண்டு கிராமி விருதுகளை பெற்றார்.

உலக ஒலிப்பதிவு விருது (World Soundtrack Awards)

ஏ.ஆர் ரகுமானுக்கு 2009 ஆம் ஆண்டு “ஸ்லம்டோக் மில்லியனர்” திரைப்படத்திற்காகவும் 2011 ஆம் ஆண்டு “127 ஹவர்ஸ்” (127 Hours) திரைப்படத்திற்காகவும் 2017 ஆம் ஆண்டு “வைஸ்ராய்ஸ் ஹவுஸ்” (Viceroy`s House) திரைப்படத்திற்காகவும் உலக ஒலிப்பதிவு விருதுகள் வழங்கப்பட்டன.

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards)

வருடம்

படம்

பிரிவு

1992

ரோஜா

சிறந்த இசை இயக்கம்

1996

மின்சார கனவு

2001

இலகான் (Lagaan)

2002

கண்ணத்தில் முத்தமிட்டால்

2017

காற்று வெளியிடை

2017

மம் (Mom)

சிறந்த பிண்ணனி இசை

 

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் (Tamil Nadu State Film Awards)

வருடம்

திரைப்படம்

பிரிவு

1992

ரோஜா

சிறந்த இசை இயக்கம்

1993

ஜெண்டில்மேன் (Gentleman)

1994

காதலன்

1996

மின்சார கனவு

1999

சங்கமம்

2014

காவிய தலைவன்

 

கௌரவ விருதுகள் (Honorary Awards)

இந்திய அரச விருதுகள் (Indian Government Awards)

1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருதும் 2000 ஆம் ஆண்டு நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ் விருதும் 2001 ஆம் ஆண்டு அவாத் சம்மான் விருதும் 2004 ஆம் ஆண்டு தேசிய இலதா மங்கேஸ்கர் விருதும் 2010 ஆம் ஆண்டு மூன்றாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

கௌரவ முனைவர் பட்டம் (Honorary Doctorate)

2009 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம் (Aligarh University) மற்றும் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் (Middlesex University) ஆகிய பல்கலைக்கழகங்களினால் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் 2014 ஆம் ஆண்டு இராயல் கன்சர்வேட்டையர் ஆப் ஸ்கொட்லாந்து (Royal Conservatoire of Scotland ) மற்றும் பெர்க்லீ இசைக்கல்லூரி (Berklee College of Music) ஆகிய கலைக்கழகங்களினாலும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் 15 பிலிம்பேர் விருதுகள் (Film fare Awards) 17 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் (Film fare Awards South) உட்பட மொத்தமாக 135 விருதுகளை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் பெற்றுள்ளார்.

யாரும் நினைத்து கூட பார்க்க முடியாதவாறு இந்திய இசைத்துறையில் அதிக விருதுகளையும் புகழையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இசையால் தனது பெயரை நிலைநாட்டி உலகமெங்கும் தனக்கென்று மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டதோடு “த மொசார்ட் ஆப் மெட்ராஸ்” (The Mozart of Madras) எனவும் அழைக்கப்படுகின்றார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். இவ்வாறு வெற்றி கண்ட நமது இசை நாயகன் ஏ.ஆர் ரகுமான் அவர்களின் வெற்றிப்பயணம் மேலும் மேலும் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *