தினமும் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தை முறையாக பேண தவருகிறோம். தினந்தோறும் உள்ள நிறைய வேலைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள் காரணமாக இடைவெளி இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு தினமும் செயற்படுவதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோய்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. முறையான உடல் நல பராமரிப்பு இல்லாததால் இன்றைய காலங்களில் சிறு குழந்தைகள் கூட பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். நமது உடல் ஆரோக்கியமாகவும் மனது புத்துணர்ச்சியாகவும் இருந்தால் தான் நாளை சிறப்பாக தொடங்க முடியும். தினமும் காலையில் தவறாமல் சில பழக்கவழக்கங்களை பின்பற்றி வந்தால் நமது வாழ்வை ஆரோக்கியமாகவும் முறையாகவும் வாழ முடியும். அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
காலையில் சீக்கிரமாக எழும்புதல்
நாளை சிறப்பாக ஆரம்பிப்பதற்கு நாம் முதலில் செய்யவேண்டிய விடயம் காலையில் சீக்கிரமாக எழும்புவது தான். சூரிய உதயத்திற்கு முன்பாக எழுவதால் உடல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அதாவது மூளையில் உள்ள நரம்புகள் சீராக இயங்க ஆரம்பிப்பதால் உடலுக்கு உற்சாகமாக இருக்கும். காலையில் இருக்கும் சுத்தமான காற்றை சுவாசிப்பதால் உடலிலுள்ள மூச்சுப்பிரச்சினை நிவர்த்தியாவதோடு நுரையீரல் வலிமைபெறும். அதனால் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இதனால் இரத்த அழுத்தம் சரியான அளவில் கட்டுப்படுத்தப்படும்.
சுத்தமான நீரை அருந்துதல்
காலையில் எழுந்தவுடன் சூடான எந்த பானமும் குடிக்கக்கூடாது. பெரும்பாலானோர் எழுந்ததும் தேனீர் மற்றும் கோப்பி போன்ற சூடான பானங்களை குடிப்பார்கள். ஏன் அதை வழக்கமான கட்டாய செயலாக கூட செய்வார்கள். இவ்வாறு செய்வதால் நெஞ்செரிச்சல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். காலையில் எழுந்து அரை மணிநேரத்திற்குள் குறைந்தது ஒரு கப்பை விட அதிகமாக எவ்வளவு முடியுமோ அந்த அளவு சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். சூடான நீரை தவிர்ப்பது நல்லது. சுத்தமான நீரை குடிப்பதால் உடலுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும். முதலில் நோய் வரக்காரணமாக இருப்பதே வயிற்றுப்பகுதியில் சீரான இயக்கம் இல்லாமல் இருப்பதால்தான். வயிறு சுத்தமாக இருந்தால் எந்த நோயும் சீக்கிரம் வராது. தூய்மையான நீரை பருகுவதால் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் அமிலங்கள் போன்றவை வெளியேற்றப்பட்டு குடல் சுத்தமாகும். இதனால் உயர் இரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
சுத்தமான நீரில் குளித்தல்
உடலின் ஆரோக்கியத்துக்கு தினமும் காலையில் குளிப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். ஏனென்றால் உடலிலிருந்து வெளியாகும் வியர்வை, உடலில் படியும் தூசுக்கள் மற்றும் உடலில் இருக்கும் அழுக்குகள் போன்றவற்றை அகற்றவேண்டும். முக்கியமாக உடல் உஷ்ணத்தை கட்டுப்பாட்டில் வைக்க குளியல் மிக அவசியம். மூலநோய் இருக்கும் நோயாளிகள் கண்டிப்பாக உடல் உஷ்ணத்தை சமநிலையில் பேண அதிகாலையில் குளிப்பது சிறந்தது. காலையில் குளிப்பதால் உடல் புத்துணர்ச்சியடைவதுடன் அன்றைய நாளை சிறப்பாக்கிக்கொள்வதற்கான மனநிலையை அளிக்கிறது. அத்துடன் பல நோய்கள் உடலை தாக்குவதிலிருந்து பாதுகாப்பதற்கும் வழிவகுக்கிறது.
தியானம் செய்தல்
நீங்கள் தினமும் வேறுபட்ட மனநிலையை கொண்ட நபர்களை சந்திப்பீர்கள். காலையிலிருந்து இரவு வரை பல பணிகளை செய்வீர்கள். இவ்வாறு தொடர்ந்து செயற்படுவதால் மன அழுத்தம் அதிகரித்து மனதுக்கு நிம்மதி இல்லாத ஒரு உணர்வை பெறுவீர்கள். மன ரீதியான அனைத்து விடயங்களுக்கும் சிறந்த மருந்து தியானம் என்று சொல்லலாம். மனதில் ஏற்படும் கவலை, பயம், கோபம் போன்ற காரணிகளிலிருந்து விடுபட தியானம் உதவும். குறிப்பாக மனதில் உண்டாகும் குழப்பங்களை தீர்க்கவும் எந்த ஒரு விடயத்தையும் சரியாக செய்து வெற்றி பெறுவதற்காக உறுதியான முடிவை எடுப்பதற்கும் தியானம் துணைபுரிகிறது. மனம் அமைதியாக இருந்தால் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யக்கூடிய மனதைரியம் உண்டாகும். அதற்கு பெரிதும் உதவுவது தியானமாகும்.
சூரிய ஒளி உடம்பின் மீது படும் விதத்தில் இருத்தல்
சூரியன் உதித்து சிறிது நேரத்தின் பின் சூரியனிலிருந்து வரும் கதிர்கள் உடம்பில் படுவதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன் உடலுக்கு தேவையான விட்டமின் D யும் கிடைக்கிறது. இதனால் எலும்புகள் வலிமை அடையும். நரம்பு மண்டலம் சீராக இயங்கும். மேலும் இருதய நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவும். சூரிய ஒளி உடலில் படும் போது மனச்சோர்வு நீங்கி நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க துணை புரிகிறது.
உடற்பயிற்சி செய்தல்
தினமும் உடற்பயிற்சி செய்வது ஒரு சிறந்த பழக்கமாகும். உடற்பயிற்சிகளில் பல வகையான பயிற்சிகள் உண்டு. சாதாரணமாக நடைபயிற்சி, மெதுவோட்டம் போன்றவற்றை கூறலாம். ஜிம்மிற்கு செல்லுதல் மற்றும் யோகா பயிற்சி போன்றவற்றையும் குறிப்பிடலாம். உடற்பயிற்சி செய்யும் போது உடலிலுள்ள அனைத்து தசைகளும் இயங்குவதால் இரத்த ஓட்டம் சரியான முறையில் நடைபெறும். அத்துடன் உடல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பதோடு கட்டுக்கோப்பாகவும் பொலிவாகவும் இருப்பதற்கு உடற்பயிற்சி பாரிய பங்களிப்பை வழங்குகிறது. குறிப்பாக யோகா பயிற்சி செய்வதன் மூலம் பல வகையான நோய்களை குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியும். உடலிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் யோகா பயிற்சி ஒரு சிறந்த தீர்வை கொடுக்கிறது.
சத்து நிறைந்த காலை உணவை உட்கொள்ளுதல்
நாளை சிறப்பாக தொடங்குவதற்கும் அன்றைய பணிகளை நல்ல முறையில் செய்து முடிக்கவும் உடலுக்கு சக்தி மிக அவசியம். முழு நாளுக்குமான சக்தியை நாம் காலை உணவின் மூலம் தான் பெறுகிறோம். இன்றைய அவசரமான வாழ்க்கையில் பலர் காலை உணவை பற்றி யோசிப்பதே இல்லை. தேனீர் அல்லது சிற்றுண்டி போன்றவற்றை உட்கொள்கிறார்கள். சிலர் காலையில் சாப்பிடுவதே இல்லை. அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் பல நோய்களை நீங்களே கேட்டு வாங்கிக்கொள்வதாகும். காலை உணவை எக்காரணத்தைக்கொண்டும் தவிர்க்கவே கூடாது. ஏனென்றால் உடலுக்கு தேவையான சக்தியை பெறுவதற்கும் உடல் உறுப்புகள் நாள் முழுவதும் சரியாக இயங்கவும் காலை உணவு பெரும் பங்கு வகிக்கிறது. காலை உணவை உட்கொள்ளாவிட்டால் குடல் சுருங்கும். வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட்டு இரைப்பை அழற்சி (Gastritis) உண்டாகும் அதன் பிறகு ஒவ்வொரு நோயாக உங்கள் உடலை வந்துசேரும். ஆகவே காலை உணவை கண்டிப்பாக உண்ணவேண்டும்.
நாளை திட்டமிடுதல்
காலையில் எழுந்ததிலிருந்து இரவு நித்திரைக்கு செல்லும் வரை நிறைய வேலைகளை நாம் செய்யவேண்டியிருக்கிறது. அவ்வாறிருக்க காலையில் அன்றைய நாளுக்கான முழுமையான திட்டமிடலை செய்வது மிக முக்கியமானதாகும். ஏனென்றால் திட்டமிடலின் மூலம் நேர முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்ளலாம். பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். ஆகவே மன உளைச்சல் இன்றி வேலைகளை ஆக்கபூர்வமாகவும் இலகுவாகவும் செய்து முடிக்க முடியும். இதனால் மன அழுத்தம் மற்றும் குழப்பம் இன்றி வேலைகளை உங்களால் முழுமையாக செய்துமுடிக்கலாம்.
புத்தகங்கள் அல்லது பத்திரிகை வாசித்தல்
இன்றைய நவீன காலமானது நாள்தோறும் புதுப்புது விடயங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தினமும் பல வகையான புதிய அம்சங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் உங்கள் எதிர்கால வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்ள இவ்வாறான புதிய விடயங்களை தெரிந்து கொள்வதும் கற்றுக்கொள்வதும் அவசியம். அதற்கு உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான். புத்தகங்களின் மூலம் உங்கள் அறிவை பெருக்கிக்கொள்ள முடியும். அதுபோல தான் பத்திரிகையும். பத்திரிகைகளில் அனைத்து வகையான செய்திகளையும் பார்க்க முடிகிறது. அதனால் அவற்றை வாசிப்பதன் மூலம் பல விடயங்களை தெரிந்து கொண்டு உங்களது வாழ்க்கையை சிறப்பாக்கிக்கொள்ள முடியும்.
புன்னகை செய்தல் மற்றும் தெளிவான விடயங்கள் பற்றி யோசித்தல்
உங்களது நாளை தொடங்க தயாராகிவிட்ட நீங்கள் உங்கள் மனதில் சில உறுதியான எண்ணங்களை நினைத்து பாருங்கள். இந்த விடயங்களை அல்லது வேலைகளை எந்த பிழையும் இன்றி நேர்த்தியாக என்னால் செய்து முடிக்க முடியும் என்ற உறுதியான சில எண்ணங்களை உங்கள் மனதுக்குள் எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல புன்னகை செய்தல் என்பது நமக்கும் நல்லது நம்மை சுற்றி இருப்போருக்கும் நல்லது. குடும்ப அங்கத்தவர்கள், அயலவர்கள் மற்றும் நீங்கள் செல்லும் வழியில் சந்திக்கும் தெரிந்தவர்கள் போன்றோருக்கு “குட் மோனிங்” (காலை வணக்கம்) என்று சொல்லி புன்னகை செய்வதால் உங்கள் மனதுக்கு ஒரு சந்தோஷம் ஏற்படுவதுடன் உங்களது நாளை சிறப்பாக்கிக்கொள்வதற்கான சிறந்த மனநிலையையும் பெறுவீர்கள். இவ்வாறு காலை வேளையில் அடையும் சந்தோஷம் உங்களை நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
நாம் அனைவரும் சந்தோஷமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசைபடுகிறோம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து குறிப்புகளும் அதற்கு துணைபுரிகிறது. காலை வேளையில் செய்யும் செயற்பாடுகள் தான் அன்றைய நாள் பயனுள்ள நாளாக அமைகிறதா அல்லது பயனற்று போகிறதா என்பதில் தங்கியிருக்கின்றன. எனவே காலை வேளையில் செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்வதால் அன்றைய நாளை சிறப்பாக்கிக்கொள்ளவும் முடியும்; ஆரோக்கியமாக வாழவும் முடியும்.