Smart Tamil Trend

Trending Now

Google Search

Asia Cup 2018 » ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்

ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்

Spread the love

நடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் பந்தயமானது ஆசிய கிண்ண வரலாற்றில் 14 வது முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாகும். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை (15-28 செப்டம்பர் 2018) நடைபெற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட 3 வது கிரிக்கெட் போட்டித்தொடராகும். இம்முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்குபற்றின. இந்நாடுகளுக்கிடையில் மொத்தமாக 13 போட்டிகள் நடந்து முடிந்தன.

குழு A

குழு B

இந்தியா இலங்கை
பாகிஸ்தான் வங்காளதேசம்
ஹாங்காங் ஆப்கானிஸ்தான்

 

குழுநிலை போட்டிகள்

1 வது போட்டி – இலங்கை Vs வங்காளதேசம் (15/09/2018)

இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 1 வது போட்டியானது துபாயின் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேச அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த வகையில் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 261 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்ச ஓட்டமாக முஷ்ஃபிக்கர் ரஹீம் (Mushfiqur Rahim) 144(150) ரன்களை குவித்தார். லசித் மாளிங்க (Lasith Malinga) 23 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை மட்டுமே பெற்றது. வங்காளதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

2 வது போட்டி – பாகிஸ்தான் Vs ஹாங்காங் (16/09/2018)

இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஹாங்காங் அணியினர் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். 37.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 116 ஓட்டங்களை பெற்றார்கள். அதிக தனிநபர் ஓட்டமாக 27(47) ஓட்டங்கள் ஐசாஸ் கானால் (Aizaz Khan) பெறப்பட்டது. உஸ்மான் கான் (Usman Khan) 7.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 120 ரன்களை பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதிகபட்ச ஓட்டமாக இமாம் அல் ஹக் (Imam Ul Haq) 50(69) ஓட்டங்களை பெற்றார்.

3 வது போட்டி – இலங்கை Vs ஆப்கானிஸ்தான் (17/09/2018)

ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதுடன் துடுப்பெடுப்பில் ஈடுபட்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை குவித்தது. ரஹ்மட் ஷா (Rahmat Shah) சிறப்பாக விளையாடி 72(90) ரன்களை தன் அணிக்காக பெற்றுகொடுத்தார். திசர பெரேரா (Thisara Perera) 9 ஓவர்கள் வீசி 55 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி இலக்கு 250 ஓட்டங்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. உபுல் தரங்க (Upul Tharanga) 36(64) ரன்களை பெற்றார். அணியில் வேறுயாரும் 30 ரன்களை தாண்டவே இல்லை. 91 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி அடைந்த முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

4 வது போட்டி – இந்தியா Vs ஹாங்காங் (18/09/2018)

நாணய சுழற்சியில் வெற்றியடைந்த ஹாங்காங் அணியினர் களத்தடுப்பில் ஈடுபட நினைத்தனர். அந்தவகையில் களம் இறங்கிய இந்திய அணியினர் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களை குவித்து வழுவான நிலையில் இருந்தனர். ஷிக்கார் தவான் (Shikhar Dhawan) சிறப்பாக விளையாடி 127(120) ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய கலீல் அஹமட் (Khaleel Ahmed) என்ற வீரருக்கு இது முதலாவது போட்டியாக அமைந்தது. தனது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களத்தில் நுழைந்த ஹாங்காங் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 259 ஓட்டங்களை பெற்று 26 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. அதிகபட்ச ஓட்டமாக நிஸாகட் கான் (Nizakat Khan) 92(115) ஓட்டங்களை தன் அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.

5 வது போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் (19/09/2018)

பகல் இரவு ஆட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பரிகொடுத்து 162 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 47(62) ஓட்டங்களை பாபர் அஸாம் (Babar Azam) அந்த அணிக்காக பெற்று கொடுத்தார். புவ்னேஸ்வர் குமார் (Bhuvneshwar Kumar) 7 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அதிக ஓட்டமாக ரோஹிட் சர்மா (Rohit Sharma) 52(39) ஓட்டங்களை பெற்றார்.

6 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs வங்காளதேசம் (20/09/2018)

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட நினைத்தது. அந்தவகையில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியினர் வரையறுக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றனர். ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஹஸ்மதுல்லா ஷாஹிடியின் (Hashmatullah Shahidi) 58(92) ஓட்டங்கள் அணியில் தனி ஒருவரின் அதிகபட்ச ஓட்டமாக இருந்தது. 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணியால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 136 ஓட்டங்களால் வங்காளதேசம் படுதோல்வி அடைந்தது.

குழுநிலை போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அணிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் ஃபோர் (Super Four) சுற்றுக்கு தெரிவாகின.

சூப்பர் ஃபோர்

7 வது போட்டி – இந்தியா Vs வங்காளதேசம் (21/09/2018)

இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வங்காளதேச அணிக்கு வழங்கியது. அந்தவகையில் முதலில் களம் இறங்கிய வங்காளதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 173 ஓட்டங்களை பெற்றது. மெஹெதி ஹசன் (Mehedi Hasan) கூடிய ஓட்டமாக 42(50) ஓட்டங்களை பெற்றதோடு எதிர் அணியின் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்பு களத்தில் விளையாட ஆரம்பித்த இந்திய அணியினர் 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 என்ற வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர். ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காமல் 83(104) ஓட்டங்களை பெற்றார்.

8 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான் (21/09/2018)

இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களை குவித்தது. ஹஸ்மதுல்லா ஷாஹிடி ஆட்டமிழக்காமல் 97(118) ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் மொஹமட் நவாஸ் (Mohammad Nawaz) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 258 என்ற இலக்குடன் மைதானத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணியினர் 49.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 3 விக்கெட்டுகளால் வென்றனர். இமாம் அல் ஹக் 80(104) ரன்களை பெற்று கொடுத்தார்.

9 வது போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் (23/09/2018)

இவ்விரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபட வேண்டியிருந்தது. பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்றதுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் 237 ஓட்டங்களை பெற்றது. இவ்வணிக்காக ஓரளவு சிறப்பான முறையில் விளையாடி சொயிப் மலிக் (Shoaib Malik) 78(90) ரன்களை பெற்றார். வெற்றி இலக்கு 238 ரன்கள் என்ற அடிப்படையில் இந்திய அணி விளையாட ஆரம்பித்தது. 39.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 238 ஓட்டங்களை பெற்றதுடன் 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை ஈட்டியது. ஷிகார் தவான் மிகச்சிறப்பாக விளையாடி 114(100) ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இப்போட்டியின் போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் யுஸ்வேன்ற சஹால் (Yuzvendra Chahal) தனது 50 வது விக்கெட்டை வீழ்த்தியதுடன் ரோஹிட் சர்மா 7000 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் சேர்ந்தார்.

10 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs வங்காளதேசம் (23/09/2018)

இந்த போட்டியில் வங்காளதேசம் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. வரையறுக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை பெற்றது. இவ்வணியின் மஹ்மதுல்லா (Mahmudullah) 74(81) ரன்கள் பெற்றதுடன் பந்து வீச்சில் எதிரணியின் அஃப்தப் அலாம் (Aftab Alam) 54 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணியினர் 50 ஓவர்கள் முடிவடையும் போது 246 ரன்களை பெற்று 3 ரன்களால் தோற்றனர். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக 71(99) ஓட்டங்களை ஹஸ்மதுல்லா ஷாஹிடி பெற்றார். வங்காளதேச அணியின் மஷ்ரஃபே மோர்டஸா (Mashrafe Mortaza) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 250 வது விக்கெட்டை வீழ்த்தினார்.

11 வது போட்டி – இந்தியா Vs ஆப்கானிஸ்தான் (25/09/2018)

ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவடையும் போது 8 விக்கெட்டுகள் இழக்கப்பட்ட நிலையில் 252 ஓட்டங்களை திரட்டியது. இதன்போது மொஹமட் ஷஹ்ஸாட் (Mohammad Shahzad) 124(116) ஓட்டங்களை பெற்றார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 253 என்ற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்திய அணியினர் 49.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றனர். ஆகவே போட்டி வெற்றி, தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது. இந்திய அணியின் அதிகபட்ச ஓட்டமாக K.L ராகுல் (K.L Rahul) 60(66) ஓட்டங்களை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.

12 வது போட்டி – வங்காளதேசம் Vs பாகிஸ்தான் (26/09/2018)

இந்த போட்டியில் வங்காளதேச அணி நாணய சுழற்சியில் வென்றது. முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 48.5 ஓவர்கள் முடிவில் 239 ரன்களை பெற்றது. முஷ்ஃபிக்கர் ரஹீம் 99(116) ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஜுனைய்ட் கான் (Junaid Khan) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பரிகொடுத்து 202 ஓட்டங்களை மட்டுமே பெற்றதோடு 37 ஓட்டங்களால் தோல்வி அடைந்தனர். இமாம் அல் ஹக் 83(105) ரன்களை பெற்றதோடு எதிரணியின் முஸ்தாஃபிசர் ரஹ்மான் (Mustafizur Rahman) 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதிப்போட்டி

13 வது போட்டி இந்தியா Vs வங்காளதேசம் (28/09/2018)

இப்போட்டி அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகும். இறுதி பந்துவரை மிக விறுவிறுப்பாக அமைந்த ஒரு போட்டி என்று சொல்லலாம். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா களத்தடுப்பில் ஈடுபட நினைத்தது. துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வந்த வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. லிடோன் தாஸ் (Liton Das) 121(117) ஓட்டங்களை தன்னுடைய அணிக்காக பெற்றிருந்தார். இந்திய அணியின் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) 45 ஓட்டங்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு பிறகு 223 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி இறுதி பந்தில் வெற்றியை பதிவுசெய்தது. அதனடிப்படையில் ஆசிய கிண்ண வரலாற்றில் இந்திய அணி பெற்ற 7 வது அசிய கிண்ணமாக இவ்வெற்றி பதிவுசெய்யப்பட்டது. ஷிக்கார் தவான் தொடரின் ஆட்ட் நாயகன் ஆனார்.

 

உண்மையிலேயே இப்போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக அமைந்த போட்டியாகும். இறுதியில் யார் வெல்வார்கள் என எவராலும் எதிர்வுகூற முடியாதவாறு பரபரப்பாக அமைந்தது. இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *